பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
டொனி பிளயருக்குப் பிறகு பிரதமராக பதவியேற்ற கோர்டன் பிறவுணால் மக்களின் ஆதரவைப் பெற இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரது நிர்வாக சீரின்மையே என தகவல்கள் கூறுகின்றன. பதவிக்கு வந்து ஒரு ஆண்டு கூட நிறைவுபெறாத நிலையில் பிறவுணுக்கு எதிரான கோஷங்கள் நாளுக்குநாள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற லண்டன் மேஜர் தேர்தலில் பிறவுணின் தொழில் கட்சி தோல்வியடைந்தது. கன்சவேடிவ் கட்சி இந்தப் பதவியைக் கைப்பற்றியது.
இத்தேர்தல் பிரசாரத்தின்போது பிறவுணுக்கு எதிரான வாக்குகள் தான் தோல்விக்கு முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் 55 சதவீத எதிர்ப்பு வாக்குகள் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாகச் சென்றுள்ளன. அதேபோல அங்கு நடைபெற்ற பல்வேறு உள்ளூராட்சித் தேர்தலிலும் தொழில் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. தொழில் கட்சியின் ஆதரவு கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 4.2 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், தொழில்க்கட்சி நிர்வாகிகள் கோபமடைந்துள்ளனர். வரும் பொதுத் தேர்தலுக்குள் பிறவுண் பதவி விலக வேண்டும் எனக் கோஷமிட்டுள்ளனர்.
இதேவேளை, பிறவுண் அறிமுகப்படுத்தியுள்ள வரிச்சீர்திருத்தம் ,பொருளாதார சீர்திருத்தம் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.