* ஊவா மாகாண ஆளுநர் தெரிவிப்பு
ஊவா மாகாணத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கமென்று தெரிவித்துள்ள ஊவா மாகாண ஆளுநர் சீ. நந்தமெத்தியூ மேற்படி மாகாணத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து எனது கவனத்திற்குக் கொண்டுவரப்படல் வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் மேற்படி மாகாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊவா மாகாண ஆளுநர் ஓய்வு பெறுவதற்கான செயற்பாடுகள் மேற்கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில், அவரது சேவைக்காலம், மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது.
அவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டதையடுத்து ஆளுநர் தமது பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
ஊவா மாகாண சபையிலோ, மாகாண அரச திணைக்கள அலுவலகங்களிலோ ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுமாயின் அது சம்பந்தமாக, எனது கவனத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும்.
இதுபோன்ற தகவல்கள் கொடுப்போரின் பெயர், விபரங்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் தகவல்கள் வழங்குவோரின் பெயர், விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.
என்னைச் சந்திப்பதற்கு எவருக்கும் உரிமையுண்டு. அதற்கான நாளொன்றை நான் ஒதுக்கிடவும் இல்லை. எச்சந்தர்ப்பத்திலும் என்னைச் சந்திக்கலாம்.
ஊவா மாகாண சபையினால் மக்களுக்கு ஆற்றும் சேவைகள் போதுமானதன்று. அச்சபையினால் மேலும் பெரும்பாலான சேவைகளை வழங்க வேண்டும்.
மக்களுக்கு முறையானதும் கிரமமானதுமான சேவைகள் கிடைக்க வேண்டும். இது விடயத்தில் நான் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஊழல், மோசடிகளில் ஈடுபடுவோர் விடயத்திலும், மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற முடியாதவர்கள் விடயத்திலும் மிக மிகக் கண்டிப்பாக நடந்துக்கொள்வேன்.
அவர்கள் எந்தவொரு தரத்திலிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பின்னிற்கமாட்டேன்.
இம் மாகாணத்தின் ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தில் முன்னணி வகிப்பவர்கள், மக்களுக்கு சிறப்பான சேவைகள் கிடைக்க வேண்டுமென்பதில், என்னைவிட அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.