கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இரத்தம் சிந்தி, பல உயிர்களையும் பலிகொடுத்து வளர்த்தெடுத்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒரு வர்த்தக கம்பனியாக்கி ஐக்கிய தேசிய கட்சியிடம் அடகு வைத்துள்ள அக்கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க இத் தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும். இவ்வாறு கிழக்கு தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் சாய்ந்தமருது உசாம் சலீமை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்க பல இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும் சந்தித்தார். சமூகத்தின் அரசியல் சாதனைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட இக் கட்சி இன்று சுயநலவாதிகளின் கைகளில் அகப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலம் மட்டும் கிழக்கு மக்களுக்கு சமூக உணர்ச்சியை ஊட்டி வெற்றி பெற்ற பின்னர் மக்களை மறந்து அப்பக்கம் தலைவைத்தும் பார்க்காத தலைமை கிழக்குத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து என்ன செய்யப் போகிறது? பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கும் விடயங்களைப் பெரிதாக்கி, பிறர் சொல்லுக்கு ஆமாம் போடுபவர்களை தலை வணங்கி முஸ்லிம் காங்கிரஸை வீழ்ச்சியான பாதைக்கு இவர்கள் இட்டுச் செல்கின்றனர்.
முஸ்லிம்களின் உரிமை பற்றி பேசித் திரியும் இவர்கள் என்ன உறுதியான அரசியல் திட்டத்தை முன்வைத்துள்ளார்கள். இத் தேர்தலில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எமது பிரதேசத்தின் அபிவிருத்திப் பற்றிக் கனவு காணத்தான் முடியும்.
இலங்கையை ஆளும் அர சாங்கத்தை அமைக்கக் கூடிய பங்காளிகளாக வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில்தான் இருக்க வேண்டுமா? உரிமை, கடமை, கொள்கை என்பவற்றை விட்டு இத் தேர்தலில் தனது சின்னத்திலில்லாமல் யானையில் வலம் வருவதன் நோக்கம் மக்களுக்குப் புரிந்து விட்டது எனக் கூறினார்.