* மு.கா. வேட்பாளர் அப்துல் மஜீத் தெரிவிப்பு
" அபிவிருத்தி எனும் மாயையைக்காட்டி முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட சிலமுஸ்லிம் அமைச்சர்களே முண்டியடித்து நிற்கின்றனர். அவசரகாலச்சட்ட நீடிப்புக்கான வாக்கெடுப்பில் மாதாந்தம் எதிர்த்து வாக்களிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களின் பகுதிகளில் அபிவிருத்தி நடைபெறமலா உள்ளது" என அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் (இலக்கம் மூன்று) போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம். அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.
நிந்தவூரில் நடைபெற்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் (அஷ்ரப்) தலைமையில் நிந்தவூர் மாந்தோட்டம் பகுதியில் இக் கூட்டம் நடைபெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் எம்.ரீ. ஹஸனலி உட்பட வேட்பாளர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் அப்துல் மஜீத் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் எமது முஸ்லிம் சமுதாயத்தின் தாயகம் எது என்பதை அடையாளம் காணும் தேர்தலாகும். ஆனால், எமது பூர்வீக நிலங்களையும், இருப்பையும் கபளீகரம் செய்ய முனையும் அரசுக்கு வக்காளத்து வாங்கித்திரியும் சுயநலம் கொண்டமுஸ்லிம் அமைச்சர்கள் `அபிவிருத்தி' என்ற மாயையில் எம் மக்களைத் திசைத்திருப்ப முனைந்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் எதிர்த்தே வாக்களித்தவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப் பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா ஏன்? கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கூட அபிவிருத்தி மற்றும் எல்லா விடயங்களும் நடைபெறுகின்றது தானே ? ஆனால், எமது முஸ்லிம் அமைச்சர்கள் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு எமது உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்க துணைபோய் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் எதைச் சாதித்துள்ளது என இவர்கள் கேட்கிறார்கள் கேவலம் இன்று இத்தகையவர்கள் அமைச்சர்களாகப் பவனிவருவதே முஸ்லிம் காங்கிரஸால் தானென்பதை ஏனோ மறந்துவிட்டனர்.
நடந்து வந்தபாதையை மறந்து இன்று மரத்தை அழிக்கவே இவர்கள் முனைந்துள்ளனர். இத்தகைய துரோகத்தனம் எம்மிடமில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் சக்தி, இதை அழிக்க எவரும் முனைந்தால் அவர்களுக்கு மக்களே பாடம் புகட்டுவர். எனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் உரிமைகள் பெற்று நிம்மதியுடன் வாழலாம். இது சாதாரண தேர்தலல்ல, வாக்காளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர்களாக மாறவேண்டிய தேர்தல்.