* பவ்ரல் கூறுகிறது
யோ.நிமல்ராஜ்
கிழக்குமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள வாக்களிப்பானது நீதி, நேர்மையானதாக இருக்காதென பவ்ரல் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான முறையில் பிரசாரம் செய்வதற்கான சூழ்நிலை அங்கு இருக்கவில்லை எனவும் இதுவரை வன்முறைகள் தொடர்பாக61 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுதொடர்பாக பவ்ரல் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கிழக்குத் தேர்தல் தொடர்பாக பவ்ரல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சில துணை ஆயுதக் குழுக்கள் அங்கு மிகவும் பலம்பொருந்தியனவாக உள்ளதென்பது சில விமர்சகர்களின் கருத்தாகவுள்ளது.
இவ் ஆயுதம் தாங்கிய துணைக்குழுக்களின் செல்வாக்கு தோற்றப்பாடற்ற நிலையில், மக்கள் மனதில் அச்சத்தையும் ஐயப்பாட்டையும் ஏற்படுத்துவதே இந்நிலையின் விளைவாகும்.
இத்தகைய காரணங்களால் பயமுற்ற நிலையிலேயே கிழக்குவாழ் மக்கள் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக 60 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இரு மனிதப் படுகொலைகள், ஒரு ஆட்கடத்தல், மூன்று குண்டு வெடிப்பு, 13 தாக்குதல் சம்பவங்கள், ஒரு கர்த்தால், மூன்று தடவை சொத்துக்கள் தாக்கப்பட்டமை, ஒன்பது கொலை அச்சுறுத்தல்கள், 22 தடவை அரச சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் ஆறு தடவைகள் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை என்பனவடங்கும்.
இவற்றின் மூலம் அரசியல் மற்றும் அதிகாரமென்பன முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதென்பதே வெளிப்படை உண்மையாகும்.
அத்துடன் அரசிற்கு சொந்தமான வானொலி சேவைகள் இரண்டிலும் அரசின் தொலைக்காட்சி சேவை ஒன்றிலும் கிழக்குத் தேர்தல் தொடர்பான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அரசுக்கு சொந்தமான ஒன்பது வாகனங்கள் பல்வேறு கட்சிகளால் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்குத் தேர்தலில் 19 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நடமாடும் பணியில் ஈடுபடும் அதேநேரம், ஒருவாக்குச் சாவடிக்கு இரு கண்காணிப்பாளர்கள் என்ற விகிதாசார அடிப்படையில் 2144 கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலைகளில் கடந்த 28, 29 ஆகிய திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பில் எண்பது வீதமானோர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் எந்தவிதமான மோசடிகளுமின்றி நடைபெற வேண்டுமென்பதே பவ்ரல் அமைப்பின் பிரார்த்தனையாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.