அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளதால் அடுத்து வரும் மாதங்களில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை அரிசி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பானது அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது கையிருப்பில் உள்ள அரிசியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என இச்சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டு விலையால் ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் 10 ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டு பாரிய நட்டத்தை தாம் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்தால் தாமும் குறைந்த விலையில் அரிசியை விற்கலாம் எனவும் ஆனால், விவசாயிகள் கூடிய விலையில் நெல்லை தமக்கு விற்பனை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல்லை தாம் கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் தமக்கு இத்தொழிலில் நட்டமே ஏற்படும்.
இந்த நிலையில் தாம் தொடர்ந்தும் தொழிலைச் செய்ய முடியாது எனவும், அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.