திருகோணமலை மாவட்டத்தில் மே 10 ம் திகதி 2171 அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் பிரதம கணக்கிடும் அதிகாரிகளாகப் பணிபுரிவதற்கு கொழும்பு, மாத்தளை ஆகிய வெளி மாவட்டங்களிலிருந்து அரசாங்க அதிகாரிகள் தருவிக்கப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை மாவட்டச் செயலக தகவல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை மாவட்டத்தில் தொகுதி அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை வருமாறு; திருகோணமலை 91, 598, மூதூர் - 84, 175, சேருவில - 60,690. மாவட்டத்தின் மொத்த வாக்களர் எண்ணிக்கை 2,42,463. திருகோணமலை மாவட்டத்தில் 278 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தொகுதிரீதியாக அவை வருமாறு; திருகோணமலை - 97, மூதூர்-94, சேருவில - 872 இடம்பெயர்ந்த வாக்களர்களுக்கென ஆறு தனி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். குச்சவெளி, தம்பலகமம், திருகோணமலை ஆகிய இடங்களில் தலா 2 வாக்களிப்பு நிலையங்கள் இடம்பெயர்ந்த வாக்களர்களுக்காக அமைக்கப்படும். இந்த 6 நிலையங்களும் மொத்த 278 நிலையங்களுக்குள் அடங்கும். இடம்பெயர்ந்த வாக்களருக்கான நிலையங்களுக்கென தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
கிழக்கு மாகாண சபைக்கென திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆகும். இதற்காக 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 156 வேட்பாளர்களும் 19 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 247 வேட்பாளர்களும்- மொத்தமாக 403 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் 12 அரசியல் கடசிகளின் பெயர்கள் வருமாறு; (அகரவரிசைப்படி) அகில இலங்கை தமிழர் கூட்டணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக சங்வர்தன பெரமுன, றுகுணு ஜனதா பக்ஷய, விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி, ஷ்ரீலங்கா தேசிய முன்னணி, ஷ்ரீலங்கா முற்போக்கு முன்னணி, சிங்ஹளயே மஹசம்மத பூமிபத்ர பக்ஷய.
இதேவேளை, தேர்தல் தினத்தன்றும் வாக்குகள் எண்ணப்படும் தினமும் திருகோணமலை மாவட்ட செயலக வளவில் அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கிய ஊடகவியலாளர் அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களே அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸார் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.