இரத்தினபுரி அரசின் வைத்தியசாலை தாதிகளின் பணி நிறுத்தம் காரணமாக நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கடந்த மாதம் 24 ஆம் திகதி இவ்வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியருக்கும் தாதி ஒருவருக்குமிடையே இடம்பெற்ற சர்ச்சையைத் தொடர்ந்து 6,10,7,16 ஆம் இலக்க வார்ட்டுகளில் பணியாற்றிய வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, வைத்தியருடன் தகராறில் ஈடுபட்ட தாதி கேகாலை வைத்தியசாலைக்கு கடமைக்காக இடமாற்றப்பட்டார்.
இதனையடுத்து, வைத்தியர்கள் கடமைக்கு திரும்பியபோதும், இந்த இடமாற்றத்தை ஆட்சேபித்து இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் அனைவரும் கடந்த 7 ஆம் திகதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வேலை நிறுத்தத்தின் ேபாது தாதியர்கள், மருந்துகள் விநியோகிப்பகுதி அலுமாரிகளின் சாவிக் கொத்துகளையும் ஒப்படைக்காமை காரணமாக, நோயாளிக்கு தேவைப்படும் அவசிய மருந்துவகைகள் உட்பட, மருத்துவ உபகரணங்கள் மற்றும் சேலைன் போன்ற அவசர சிகிச்சைக்கான வசதிகள் எதனையும் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதியாரின் இப்பணி நிறுத்தத்தினால், கலவான வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட, லீலாவதி (45) என்ற கலவான பகுதியைச் சேர்ந்த நோயாளி உரிய சிகிச்சைகளை வழங்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
தற்போது நோயாளிகள் இவ்வைத்தியசாலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வைத்தியசாலை நிர்வாகமும், சுகாதார அமைச்சும் இவ்வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.