கண்டி மாநகரிலுள்ள மிகப் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு (பிரிட்டனைச் சேர்ந்தவர்) விஸா காலத்தை நீடிக்க அரசு மறுத்துவிட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையேற்பட்டுள்ளது.
இத்தனியார் பாடசாலை அதிபர், ஆசிரியர் தொடர்பாக நீண்டகாலமாக இரகசியப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவந்துள்ளதுடன் அண்மையில் இப்பாடசாலையைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவர் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்றவர் எனக்கூறி கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
தங்கள் பாடசாலை அதிபர் தொடர்பாக சில ஆசிரியர்களே தகவல்களை வழங்கி வந்ததாகத் தெரியவருவதோடு இவர் கடல்கோள் அனர்த்தத்தின் போது காலி, மாத்தறை பகுதிகளுக்குச் செல்லாது ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி வடகிழக்கு பகுதிக்குச் சென்று உதவி செய்தவர் எனவும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களோடு தொடர்புடையவர் எனவும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் இயக்குனர் எனவும் தெரியவருவதோடு இலங்கைக்கு இப்பாடசாலைக்கு வருவதற்கு முன் தென் இந்தியாவில் ஒரு பாடசாலை அதிபராக இருந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தனியார் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் இரண்டு பிரதான கட்சிகளிலும் முக்கிய அமைச்சர்களாகவும் அமைச்சுப் பதவிகள் வகித்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் சிலர் இந்த அதிபர் குறித்து சிபார்சு செய்தும் இவருக்கு விஸா வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது.