* பிரதி அமைச்சரிடம் முறையீடு
கொழும்பிலிருந்து வெள்ளை வானில் மட்டக்களப்பு தேத்தாத்தீவுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கணவனை பறிகொடுத்த பட்டதாரி குடும்பப் பெண்ணை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்துள்ளதாக சிறிய தாயார் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் புகார் செய்துள்ளார்.
சண்முகநாதன் கலைவாணி (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயே கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிய தாயாரான சுப்பிரமணியம் லெட்சுமிபிள்ளை புகார் செய்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த 25.04.2008 இரவு வெள்ளை வானில் வந்தவர்கள் தங்களை பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு தொலைபேசி இலக்கத்தை கலைவாணியிடம் காண்பித்து சீராள சிங்கம் என்பவருடன் கதைத்தது தொடர்பாக விசாரித்தனர். கலைவாணி வீட்டில் அவரும் வேறு சிலரும் அகதிகளாக தங்கியிருந்தனர். தற்போது அவர்களை விசாரித்த பின்னரே குறிப்பிட்ட அந்த நபருடன் தொலைபேசியில் கதைத்ததை கலைவாணி ஒப்புக்கொண்டதையடுத்து இரவோடு இரவாக அவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அழைத்துச்சென்று தடுத்துவைத்துள்ளது.
கலைவாணி கணவரை இழந்தவர். 15 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். கலைவாணி வீட்டில் அகதிகளாக இருந்தவர்கள் உறவினர்கள் அல்ல. அவர்கள் தற்போது எங்குள்ளார்கள் என்று தெரியாது. இந்த நிலையில், கலைவாணியை கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநரிடம் தொடர்புகொண்டுள்ளார்.