* தேசிய புத்திஜீவிகள் சபை வேண்டுகோள்
ரொஷான் நாகலிங்கம்
கிழக்கு மக்கள் தமது வாக்குகளை சரியாக உபயோகித்து ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்து நாட்டில் ஜனநாயகத்தை சிதைக்கும் அரசுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமென தேசிய புத்திஜீவிகள் சபை தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை பொரளையிலுள்ள மகா விஜய மன்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அதன் செயலாளர் சுஜித் அக்கரவத்த மற்றும் அதன் உறுப்பினர்களான ஒலிபர் அபயநாயக்க, விஜயதுங்க, முன்னாள் மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா, எட்வின் வீரசிறி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
செயலாளர் சுஜித் அக்கரவத்த
இதில் தேசிய புத்திஜீவிகள் சபை செயலாளர் சுஜித் அக்கரவத்த உரையாற்றுகையில்;
"இந்த அரசாங்கம் அடிப்படை மனித தேவைகளை கணக்கில் எடுக்காமையால் மக்கள், வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாது அல்லாடுகின்ற நிலையில், தற்போது மக்கள் விரோத செயற்பாட்டிலும் அரசு இறங்கியுள்ளது.
அரந்தலாவையில் பிக்குகளையும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களையும் படுகொலை செய்த பயங்கரவாதிகளுடன் அரசாங்கம் தேர்தலுக்காக கூட்டமைத்தமையானது மக்கள் விரோத செயலாகும்.
பயங்கரவாதிகளைக் கொண்டு கிழக்கு மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்காகவே அரசு அவர்களோடு இணைந்துள்ளது. அம்மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளை தெரிந்தெடுப்பதை தடுக்கும் இச்செயற்பாடு அவர்களது உரிமைகளை பறிக்கும் செயலாகும். இந்நிலையில், மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென நாம் கோருகின்றோம்" என்றார்.
ஒலிவர் அபயநாயக்க
இங்கு அதன் உறுப்பினர் ஒலிபர் அபயநாயக்க பேசுகையில்;
"வரலாற்றில் இடம்பெறாத வகையில் கிழக்கில் தேர்தல் இடம்பெறப்போகின்றது. தேர்தல் பிரசாரத்துக்காக அரச வாகனங்களை அரசாங்கம் பயன்படுத்துகின்ற நிலையில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வாகனங்களை இவ்வாறு பயன்படுத்துவது வழமையானது. எனது அப்பா கூட இதை செய்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரொருவரே இவ்வாறு கூறுவதாயின் அரசுக்குள் துஷ்பிரயோகம் இடம்பெறுவதை அவர் அனுமதிக்கின்றாரா? ஊழல் மோசடிகள் அரசுக்குள் மட்டுமல்ல நாடு முழுவதும் வியாபித்துள்ளது.
கிழக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான உரிமையுள்ள நிலையில், ஆயுதக் குழுவைக் கொண்டு அம்மக்களின் வாக்குகளை பறிப்பதற்கான நடவடிக்கையில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இது அவர்களின் உரிமையை மீறும் செயலாகும்.
எனவே, மக்கள் தமது உரிமையை பாதுகாக்கும் முகமாக அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்கள் தயாராவிருக்கின்றனரென்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் சாட்டை அடிகொடுக்க வேண்டு"மெனத் தெரிவித்தார்.
விஜயதுங்க
"பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் கிழக்கு மக்கள் பிரச்சினை மற்றும் மிகின் எயார் நட்டம் தொடர்பில் விவாதிக்கவிருந்த நிலையில், இதற்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு தேர்தலில் இடம்பெறுகின்ற துஷ்பிரயோகம் மற்றும் மிகின் எயாரில் இடம்பெற்ற ஊழல் மோசடி என்பவற்றுக்கு பதிலளிக்க வேண்டியதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி ஒத்திவைத்தமையானது ஜனநாயக விரோத செயலாகும். அதுபோல, 17 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு தொழில்சார் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்திருந்ததுடன், அதனை நடைமுறைப் படுத்தாமை ஜனநாயக விரோத செயலெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோல் சகலரும் அதனை செய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கையில் தமது நலனுக்காக அதனை மேற்கொள்ளாதுள்ளது.
கடந்த வருடம் கொழும்பிலிருந்த தமிழ் மக்களை இந்த அரசாங்கம் பஸ்களில் ஏற்றி வடக்கு நோக்கி அனுப்பியது. இதனை நீதிமன்றம் நாட்டில் மக்கள் எங்கும் வாழும் உரிமை உள்ளது என சுட்டிக்காட்டித் தடுத்தது.
இச்செயல் கொழும்பைப் பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசாங்கம் அவர்களை விரட்டியமை ஜனநாயக விரோத செயலாகும்.
எனவே, நாட்டில் ஜனநாயகத்தை மதிக்காத அரசாங்கத்தை எதிர்த்து கிழக்கு மக்கள் தமது வாக்குகளை செலுத்த வேண்டு"மென்றார்.
மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா
"இந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக யுத்தத்தை மேற்கொள்வதாக கூறியிருக்கின்ற நிலையில், மக்களை பாதுகாக்கத் தவறியுள்ளது. இன்று யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் மட்டுமல்லாது , நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பதனால் மக்கள் மரணிப்பதுடன், காயமடைகின்றனர்.
இந்த அரசு மக்களை பாதுகாக்கும் நோக்குடன் யுத்தம் மேற்கொள்ளாது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்வதே மக்கள் பலியாவதற்கு காரணமென" குற்றம் சாட்டினார்.
ஆரியசிங்க
"பிரபல பாடகர் ஆரியசிங்க பேசுகையில்;
இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு யுத்தத்தை முன்னெடுப்பதால் சிறுபான்மை மக்களின் கலைகள் ஒடுக்கப்பட்டுள்ளது. முன்னர் சந்திரிகா ஆட்சியில் இருந்த சமயம் சிறுபான்மை மக்களின் கலைகளை பாதுகாத்ததுடன் இனங்களுக்கிடையிலான உறவும் இருந்தது.
இந்த அரசு இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை சிதைவுறுவதால் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென நாம் கோருகின்றோம்" என்றார்.