கொழும்பு செட்டியார்தெரு பகுதியில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலில் கைதுசெய்யப்பட்ட நகை வர்த்தகர் சங்கம் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயரத்னவுக்கு லங்கா நகைவர்த்தகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லங்கா நகை வர்த்தகசங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கடந்த மூன்றாம் திகதி புறக்கோட்டை பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒன்றிணைந்து செட்டியார்தெரு, கதிரேசன் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வியாபாரஸ்தலங்களிலும் சோதனையிட்டபோது சகலவிதமான ஆவணங்கள் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகவலை அறிந்த இலங்கை நகை வர்த்தக சங்க தலைவர், செயலாளர், சிரேஷ்ட உப தலைவர் முதலானோர் அமைச்சர் பெ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.செல்லச்சாமி, இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, செட்டியார் தெருவில் இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் இடம்பெற்ற அநீதியான செயற்பாட்டினை எடுத்துக்கூறி கைது செய்தவர்களை விடுதலை செய்து தருமாறு வேண்டினர்.
எனினும் இவ்வேண்டுகோளில் எவ்வித பயனும் ஏற்படாமையினால் பகல் 12.30 மணியளவில் சங்கத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.புலேந்திரன் ஆகியோர் புறக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்னவோடு கலந்துரையாடினர்.
இதன் பின் நகை வர்த்தகர் சங்கம் செட்டியார் தெருவில் கைது செய்தவர்கள் அனைவருக்கும் தாங்கள் பொறுப்பை ஏற்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உறுதி பகன்றதன் அடிப்படையில் செட்டியார் தெரு நகை வர்த்தக சங்கம் சம்பந்தப்பட்ட அனைவரும் பகல் 1.30 மணிளவில் விடுவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நேர்மையுடனும் பண்புடனும் செயல்பட்ட புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்னவுக்கு சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.