* எச்சரிக்கிறார் ரணில்
-எம்.ஏ.எம்.நிலாம்-
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளத் தவறினால் எமது நாடு இவ்வருட இறுதியுடன் வெளிநாட்டு சந்தைவாய்ப்பை இழந்துவிடும் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இதனால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் எச்சரித்துள்ளார்.
செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இவ்வருடத்துடன் காலாவதியாகும் பட்சத்தில் எமது நாட்டுக்கான சர்வதேசத்தின் பொருளாதாரக் கதவுகளும் மூடப்பட்டுவிடுமென ரணில் விக்கிரமசிங்க எதிர்வு கூறினார்.
நாட்டின் பொருளாதார விடயத்தில் எவரும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நின்று செயற்பட முனையக்கூடாதெனவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய லக்வனிதா முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்புக்குழுவினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் கூறியதாவது :-
"நாடு இன்று பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. என்னதான் புள்ளிவிபரங்களை காட்ட முனைந்தாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை பின்னடைவையே கண்டுகொண்டிருக்கின்றது.
1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் அதிகாரத்தைப் பொறுப்பேற்றதும் முதலில் மேற்கொண்ட பணி உள்நாட்டுக்கு சர்வதேச பொருளாதாரக் கதவுகளை திறந்துவிட்டதுதான். தேயிலை, இறப்பர், தேங்காய் போன்றவற்றின் மூலம் நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தைத் தக்கவைப்பது கடினமான காரியம் என்பதை உணர்ந்ததாலேயே திறந்த பொருளாதாரக் கொள்கையை நாம் அறிமுகப்படுத்தினோம்.
இதனையடுத்து ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. அதில் பிரதானமானதுதான் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதாகும். சர்வதேச சமூகத்திடமிருந்து எமதுநாட்டு ஆடை உற்பத்திக்கு நல்ல வரவேற்புக்கிட்டியது. இதனால் கிராமப்புறங்களைத் தேர்ந்தெடுத்து 200 கிராமங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நேரடியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. மறைமுகமாக 12 இலட்சம் பேருக்கு தொழில்கிட்டியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட பலதரப்பு உடன்படிக்கைகளின்படி ஆடை உற்பத்திக் கோட்டா எமக்குக்கிட்டியது. ஆரம்பத்தில் 14 நாடுகளுக்கு மட்டுமே இந்தக்கோட்டா கிட்டிவந்தது. நாம் நேரடியாகச் சென்று பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பயனாக எமது நாட்டுக்கும் இந்தக்கோட்டாவை பெறமுடிந்தது.
2002 ஆம் ஆண்டில் எமது கோட்டா உடன்படிக்கை காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தவேளையில் நான் பிரதமராக இருந்தேன். உடனடியாக வர்த்தக அமைச்சரான ரவிகருணாநாயக்கவை அனுப்பி இந்தப் பலதரப்பு உடன்படிக்கையின் கால எல்லையை நீடித்துக்கொண்டேன். அதன்படி இவ்வாண்டுடன் உடன்படிக்கைக் காலம் முடிவடைகிறது. அடுத்த மூன்று மாதங்கள் வரை மட்டுமே எமது ஆடை உற்பத்திக்கான வெளிநாட்டுச் சந்தைவாய்ப்புக் காணப்படுகிறது. உடனடியாக இதனைப் புதுப்பிக்கத் தவறினால் பெரும் நெருக் கடிநிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.
உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டுமானால் நாம் சில நிபந்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும். யுத்தம் நிறுத்தப்படவேண்டும். சமாதான முயற்சி முன்னெக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படவேண்டும். இவை நிபந்தனைகளில் முக்கியமானவையாகும். அரசாங்கம் இவற்றை எப்படி சாதிக்கப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.
இவ்வருடத்துடன் வெளிநாட்டுச் சந்தைவாய்ப்பை நாம் இழந்தால் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். பொருளாதாரப் பாதிப்பால் நாடு வறுமைக்குள் தள்ளப்படலாம் என்பதை அரசுக்கு எச்சரித்து வைக்கின்றேன்.
இத்தருணத்தில் நான் கட்சி அரசியல் ரீதியில் செயற்பட முனையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றவேண்டிய கடப்பாட்டை நான் உணர்கின்றேன். எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் பிரஸல்ஸுக்குச் சென்று ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளைச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட விருக்கிறேன். அதன் பின்னர் நாடு திரும்பியதும் முதலீட்டாளர்கள், வர்த்தக சமூகத்தினர், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அரசுடனும் பேசவிருக்கின்றேன். வெளிநாட்டுப் பொருளாதாரத்தின் பங்காளி என்ற தோரணையில் எனது கடப்பாட்டை நான் நிறைவேற்றுவேன். அதற்குரிய உத்தரவாதங்களைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும்.
இந்த விடயத்துக்குக் காலம் தாழ்த்தாமல் தீர்வு தேடமுற்படவேண்டும். தவறினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டுமொருதடவை 77 க்கு முந்தியகாலத்தைவிட மோசமானதாக அமையுமென்பதை எச்சரித்து வைக்கின்றேன்" என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.