தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பை அகற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக அகில இலங்கைத் தமிழர் கூட்டணியின் தலைவரான கே.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தன்னை அதிலிருந்து அகன்று கொழும்புக்கு வர வழைக்கும் நோக்கிலேயே இந்த முயற்சிகள் இடம்பெறுவதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;
"எனக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகக் கடந்த 5 வருடங்களாகவே ஒரு பொலிஸ் வாகனத்துடன் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. எனினும், எனது பாதுகாப்புக்கென கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்த 4 அதிகாரிகளையும் கொழும்பு திரும்புமாறு இன்று (நேற்று வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது எனக்குத் தெரியவந்ததை அடுத்து, நான் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அது மேலிடத்து உத்தரவு என்றார். இதனையடுத்து நான் இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயங்களுடன் தொடர்புகொண்டு விடயத்தை தெளிவுபடுத்தினேன். எவ்வாறிருப்பினும் இறுதியில் எனது பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்தும் என்னுடனேயே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.