பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து வவுனியா-மதவாச்சியிடையேயான ரயில் சேவையை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தற்போது கொழும்பிலிருந்து மதவாச்சி வரை புகையிரத சேவை நடத்தபட்டுவரும் நிலையில், வடபகுதி மக்களின் சிரமங்களை போக்கும் முகமாக வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையே புகையிரத இணைப்புச் சேவை நடத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை நேற்றைய தினம் சமூக சேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணிக்குழுத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ்தேவனந்தா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் மூலம் இதற்கான இணக்கத்தை பெற்றுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மதவாச்சி வரை புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் வவுனியா, மன்னார் மாவட்டங்கள் உள்ளிட்ட வடபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியிருந்தனர். மதவாச்சி ரயில் நிலையம் வரை வருவதற்காக போக்குவரத்து நெருக்கடிகளையும் வீண் செலவீனங்களையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையே ரயில் இணைப்புச் சேவை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.