இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தமது மனிதாபிமான செயற்பாட்டின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கவுள்ளதாக அதன் தேசிய செயலாளர் நிமல்குமார் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்க தினநிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;
இத்தினத்தை முன்னிட்டு எமது சங்கத்தின் கிளைகள் ஊடாக அப்பகுதியிலுள்ள இரு வைத்தியசாலைகளில் சிரமதானப் பணியை நாம் மேற்கொண்டோம். அத்துடன் இவ்வாரம் முழுவதும் எமது சங்கம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமது உறுப்பினர்களைக் கொண்டு பிரசாரநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
மேலும் மருத்துவ முகாம்களை ஒரு வாரத்துக்கு நடத்தவுள்ளோம். குறிப்பாக இத்தினத்தையொட்டி எமது சங்கத்தின் முக்கிய செயற்பாடான மனிதாபிமான செயற்பாடு ஊடாக அபிவிருத்திக்கு பங்களிக்கும் திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்.
அதாவது அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான நடவடிக்கைக்கு பங்களிப்பதாகும். நாம் இரு வகையில் இதனை மேற்கொள்ளவுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்தே செயற்படுத்தவுள்ளோம்.
அனர்த்தம் குறித்து எச்சரிப்பது மற்றும் அனர்த்தம் ஏற்படுவது தொடர்பில் ஆராய்வதுடன் அதனை மட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாகும்.
கடல்கோளால் வீடுகளை இழந்தவர்களுக்கு எமது சங்கம் வீடுகளை அமைத்து கொடுத்து வருகின்றது. இவற்றில் நான்கில் மூன்று பங்கு பூர்த்தியடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.