* நிஷாம் காரியப்பர் கூறுகிறார்
கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகவே பிரித்துவைத்திருப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பே இத்தேர்லாகுமென முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமான சிரேஷ்ட சட்டத்தரணியான நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
புல்மோட்டையில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இத்தேர்தல் தமிழர்களைப் பொறுத்தவரை பிரிக்கப்பட்ட கிழக்கு நிரந்தரமாக்குவதா? இல்லையா? என்பதை தங்களுடைய வாக்குகளால் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டை உருவாக்கியுள்ளது.
முஸ்லிம்களை பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு என தனி மாகாணம் இணைக்கப்பட்ட வடகிழக்கில் இரு மாகாணங்களில் உள்ள சகல முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களுக்கான தனி அலகு உருவாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை சொல்வதற்கான இன்னும் ஒரு சந்தர்ப்பமாகும்.
ஏற்கனவே 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இணைக்கப்பட்ட வடகிழக்குக்கான மாகாணசபைத் தேர்தலில் இரு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கான முஸ்லிம் மாகாணசபை ஒன்றைக் கோரி முஸ்லிம்களின் நூற்றுக்கு நூறு வீதமான ஆதரவைப் பெற்றிருந்தது.
இப்பொழுது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, பிள்ளையான், அதாவுல்லா, ஜாதிக்க ஹெல உறுமய சக்திகளை இணைத்துக் கொண்டு பிரிக்கப்பட்ட கிழக்கை நிரந்தரமாக்குவதற்கு `வெற்றிலை' க்கு வாக்களிக்குமாறு கோருகின்றார். மறுபக்கத்தில் ஐ.தே.கட்சி, மு.கா. போன்ற சக்திகள் வடக்கு கிழக்கில் வாழும் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வை நோக்கி அதற்கான ஆணையை யானை சின்னத்தில் மக்களிடம் கோரி நிற்கின்றார்கள். வெற்றிலை வெற்றி பெற்று விட்டால், அதற்கு பின்பு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவது பெரும் கனவாக மாறிவிடும்.
அது மட்டுமல்ல பேரினவாத சக்திகளின் கொள்கைகளுக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களும் ஆதரவளித்து விட்டார்கள் என்று அவர்கள் சர்வதேசத்தில் தங்களை நியாயப்படுத்தி விடுவார்கள். ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து இத்தேர்தலில் வாக்குப் போடத் தவறினால் கவலைப்பட வேண்டி வரும்.