-டிட்டோகுகன்-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வில் கலந்து கொள்வதற்கென இடர் முகாமைத்துவம், மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரான மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளது.
இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் வட்டாரங்களும் இதை உறுதிப்படுத்தின.
மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வில் (Universal Periodic Review) கலந்து கொள்வதற்காகவே இலங்கை பிரதிநிதிகள் குழு ஜெனீவா செல்கிறது.
இந்த அமர்வின் போது, எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதன் போது, இலங்கை அரசாங்கம் சார்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட, ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இவ்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் பற்றி கூடி ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.