-எம்.ஏ.எம்.நிலாம்-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்திகளைத் திரட்டுவதற்கு அந்த மாகாணத்துக்குச் செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அங்கு சென்ற ஏ.பி. செய்திச் சேவையின் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வருமாறு அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் சேனகவத்தேகெதரவும் அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னகோனும் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையாளருக்கு நேற்று வியாழக்
கிழமை அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கையிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் செய்திகளைத் திரட்டுவதற்கு தடைகள் போடப்பட்டு வருவது குறித்து தங்களின் நேரடிக் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
தேர்தல் குறித்த செய்திகளை திரட்டுவதற்காக கிழக்கு மாகாணத்துக்குள் நுழைவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் கிழக்குக்குச் சென்ற ஏ.பி. செய்திச் சேவையின் ஊடகவியலாளர் திரும்ப்பியனுப்பப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவானது மக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை மீறும் செயலாகவே நாம் கருதுகின்றோம். அத்துடன், தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரமான ஊடகச் செயற்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுவதாகவே நோக்க வேண்டியுள்ளது.
எனவே, இது தொடர்பில் நீங்கள் உடனடிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.