கலவான அங்கரங்கல எனும் தனியார் தோட்டத்தை சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கம்பால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
வடிவேல் சோலையம்மாள் (வயது - 86) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தோட்ட உரிமையாளர் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மீகால் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதில் நீதிவான் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்படி தோட்ட உரிமையாளர் வயோதிபப் பெண்ணுக்கு
வலுக்கட்டாயமாகச் சாராயம் கொடுத்து, அவரது பொறுப்பிலிருந்த 16 வயதுடைய அவரது பேத்தியை பலாத்காரம் செய்ய முற்பட்டார்.
இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கூக்குரலிட்டு பிரதேச மக்களை வரவழைத்து அதனை தடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர் மேற்படி வயோதிபப் பெண்ணை கடுமையாக தாக்கியதனால் படுகாயமடைந்த நிலையில் கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழப்பதற்கு முன்னர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த சந்தேக நபர் கலவான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.