பேருவளை காலிவீதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வானொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
களுத்துறைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை வானொன்றில் ஏற்றிச்செல்கையிலேயே அந்த வான் மீது பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது அதில் பயணம் செய்த இருவர் வானினுள்ளேயே கொல்லப்பட்டனர்.
மற்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், பின்னர் களுத்துறை நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் இடம்பெற்ற கொலையொன்றின் தொடர்ச்சியாகவே புதன்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
புதன்கிழமை இரவு களுத்துறை பகுதியில் இரு கோஷ்டிகளிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் வந்தவர்கள் வாடகைக்கு வானொன்றை அமர்த்தி காயமடைந்தவரை காலி நோக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வேளையில் அந்த வானை மோட்டார் சைக்கிளொன்றில் துரத்திச் சென்ற இருவர், பேருவளை பாகல்கந்த பகுதியில் வைத்து வானின் மீது பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்வத்தையைச் சேர்ந்த சமன்ஹெட்டி ஆராச்சி, காலி தடல்கையைச் சேர்ந்த கஹவவிதானகே காமினி என்பவர்களே கொல்லப்பட்டவர்களாவர். விஜயதாச டி சில்வா கஹவிதானகே சாந்த ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.