திருகோணமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் இடைக்கால மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு திருகோணமலையில் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கெதிராகவும் தமது வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் வரை தேர்தலை இடைநிறுத்தக் கோரியும் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
மனு மீதான விசாரணைகள் நேற்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிபதிகளான சந்திர ஏக்கநாயக்கா, சுனில் குணரட்ண ஆகியோர் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் மனுவை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஏற்கும் வரை தேர்தலை ஒத்திவைக்கும் இடைக்கால தடையுத்தரவு அவசியமென வலியுறுத்தினார்.
எனினும், இதற்கு பிரதிவாதிகள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏதுவான காரணிகள் இல்லையெனவும் இதன்போது வாதிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேர்தலை ஒத்திவைக்கும் இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.