ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனை நேற்று முன்தினம் புதன்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கில் ஜனநாயகத்தை மீள நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வடக்கிற்கென விஷேட செயலணிப் பிரிவை ஏற்படுத்தி அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்கவுள்ள அரசின் செயற்பாடுகள் குறித்தும் போகொல்லாகம இச்சந்திப்பின் போது பான் கி மூனிடம் விபரித்திருக்கின்றார்.
கிழக்கிலிருந்து புலிகள் வெளியேற்றப்பட்ட பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் பிரகாரம் கிழக்கு மாகாண மக்களுக்கு வலுவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் இடம்பெறுவது குறித்தும் போகொல்லாகம கூறியிருக்கின்றார்.
இலங்கையில் சமாதானமும் ஸ்திரத் தன்மையும் ஏற்படுவதற்குத் தான் வாழ்த்துவதாக இச்சந்திப்பின் போது பான் கி மூன் அமைச்சர் போகொல்லாகமவிடம் கூறியுள்ளார்.
அத்துடன், நியூயோர்க்கில் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள புத்தாயிரமா மாண்டு அபிவிருத்தி இலக்கு தொடர்பான ஐ.நா.உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வாரென எதிர்பார்ப்பதாகவும் பான் கி மூன் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் எதிர்வரும் ஜூன் 3-5 இல் உலக உணவு அமையத்தில் உயர் மட்டச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட அழைப்பை பான் கி மூன் விடுத்திருக்கின்றார். உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான புதிய முன் முயற்சிகள் தொடர்பாக ஆராயவே இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.