* 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 1,342 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் 1,022 வாக்களிப்பு நிலையங்கள்; 12 ஆயிரம் பொலிஸார், படையினர் கடமையில்
கிழக்கில் நாளை சனிக்கிழமை இடம் பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் அதன் நேச அணியான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான இருமுனை போட்டிக் களமாகவே இருக்கு மென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பல தேர்தல் களத்தில் குதித்துள்ள போதிலும் இரு பிரதான அணிகளுக்கிடையிலேயே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண சபைக்கு 35 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 1342 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் வாக்களிப்பு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அம்பாறை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகை 14 இலட்சத்து 19 ஆயிரத்து 602 பேராகும். இதில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக நீளமான (24 அங்குல நீளம்) கொண்ட வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படவுள்ள இத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக `தினக்குரலு' க்கு தெரிவித்த தேர்தல்கள் திணைக்களம் தேர்தல் பாதுகாப்புக்காக 12 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.
திகாமடுல்ல மாவட்டம்
திகாமடுல்ல மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 5 இலட்சத்து 92 ஆயிரத்து 997 ஆகும். இவர்களில் 4 இலட்சத்து
9 ஆயிரத்து 308 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய 4 தேர்தல் தொகுதிகளைக் கொண்டமைந்த இம்மாவட்டத்தில் 430 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்திலிருந்து 14 மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 11 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 403 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட மொத்த சனத்தொகை 4 இலட்சத்து 86 ஆயிரத்து 447 ஆகும். இங்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 950 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகள் உள்ள இங்கு 314 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 12 அரசியல் கட்சிகளும், 15 சுயேச்சை குழுக்களினையும் சேர்ந்த 378 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 3 இலட்சத்து 40 ஆயிரத்து 158 ஆகும். இவர்களில் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 463 பேர் வாக்களிக்கும் தகுதிபெற்றவர்களாவர்.
மூதூர், திருகோணமலை, சேருவில என 3 தேர்தல் தொகுதிகளைக் கொண்ட இம்மாவட்டத்தில் 278 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 12 அரசியல் கட்சிகளையும், 19 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 561 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
போனஸ் - 2
35 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இம்மாகாண சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களையும், வாக்குகளையும் பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்கள் சென்றடையும்.
வாக்களிப்பு நிலையங்கள் - 1022
வாக்களிப்பு நிலையங்கள் சகலவற்றிலும் 5 பொலிஸார் வீதம் பணியிலீடுபடுவர். சூழ்நிலையை கருத்திற்கொண்டு இவ்வெண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தல் ஆணையாளரின் அனுமதிபெற்ற அமைப்புகள் மாத்திரமே வாக்களிப்பு நிலையம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வாக்களிப்பு நிலையங்களில் இராணுவத்தினரும் பணியிலீடுபடுவர். வாக்களிப்பு நிலையமுள்ளே வாகனத்தில் செல்வதும், அருகே வாகனத்தை நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
தேர்தல் பாதுகாப்புக்காக 12 ஆயிரம் பொலிஸார் பணியிலீடுபடுவர். வெளிபிரதேசங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் பொலிஸார் வெளி பிரதேசங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இராணுவத்தினரும் பணியிலீடுபடுவர்.
வீதிகள், வாக்களிப்பு நிலையங்களுக்கருகாமையில் சிறப்பு சோதனைச் சாவடிகள் நிறுவப்படும். வாக்களிப்பு நிலையங்களாக பயன்படும் பாடசாலைகளுக்கு நேற்றைய தினமான வியாழக்கிழமையே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை தேர்தல் அதிகாரிகள் இவ்வாக்களிப்பு நிலையங்களை பொறுப்பேற்பர்.
தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் நீதியும், நியாயமுமான தேர்தலை நடத்தவதற்கான ஒத்துழைப்பை சகல தரப்புகளிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக உதவித் தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நாளை சனிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் தேர்தல் முடிவுகளை வெளியிடலாமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 24 அங்குல நீளம் கொண்ட வாக்குச் சீட்டு இத்தேர்தலிலேயே பயன்படுத்தப்படவுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் இலட்சினைப் பொறிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதுடன் வாக்களிப்பு நிலையம் சென்று வாக்குப்பதிவு செய்வது சிறந்ததெனவும் தேர்தல் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
மாகாணசபை பின்னணி
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இணைந்திருந்த வடகிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக வரதராஜ பெருமாள் செயற்பட்டார். 1990 மார்ச்சில் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸா இம்மாகாண சபையை கலைத்தார்.
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு சிங்கள கடும்போக்காளர்கள் உயர் நீதிமன்றத்தில் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டதற்கு எதிராக மனுவொன்றை தொடர்ந்ததையடுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருவேறாகப் பிரிக்கப்பட்டன.
இந்நிலையில் கிழக்கை விடுவித்ததாக கூறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நாளை சனிக்கிழமை அங்கு தேர்தலுக்கான வாக்களிப்பை நடத்துகிறது.
ஏனைய 8 மாகாணங்களிலும் தமிழ் அல்லது முஸ்லிம் முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்பேயில்லாத நிலையில் கிழக்கு மாகாண தமிழ்பேசும் முதலமைச்சர் தெரிவு செய்வது குறித்த ஆர்வம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. எனினும் இத்தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிஷ்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.