ஒலிம்பிக் ஜோதி நேற்று வியாழக்கிழமை எவரெஸ்ட் மலை உச்சியை சென்றடைந்தது. எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் 8844 மீற்றர் உயரத்தில் ஒலிம்பிக் ஜோதியை வீரர்கள் கொண்டு சென்றனர்.
சீனாவில் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நகரங்களை வலம் வந்த ஒலிம்பிக் ஜோதி சமீபத்தில் சீனாவை சென்றடைந்தது.
சீனாவில் உள்ள நகரங்களில் தற்போது ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இமயமலை பகுதியில் அமைந்துள்ள உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஒலிம்பிக் ஜோதியைக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக் கொண்டு வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறத் தொடங்கினர். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீரர்கள் அடங்கிய குழு எவரெஸ்ட் சிகரத்திற்கு ஒலிம்பிக் ஜோதியைக் கொண்டு சென்றது.
எவரெஸ்ட் சிகரத்துக்கு என்று தனியே ஒலிம்பிக் ஜோதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜோதி பின்னர் பிரதான ஒலிம்பிக் ஜோதியோடு இணைக்கப்படும் .