ஐ.பி.எல். லீக் போட்டியில் நெஹ்ராவின் சிறப்பான பந்து வீச்சு கைகொடுக்க... மும்பை இந்தியன்ஸ் அணி, வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. வரிசையாக 5 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திய வோர்ன் அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிர்ச்சி கொடுத்தது.
நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. உடல் தகுதியில் சச்சின் தேறாததால் மும்பை அணியின் கப்டன் பொறுப்பை மீண்டும் பொலக் பெற்றார். நாணய சுழற்சியில் வென்ற பொலக் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக ஸ்மித், அஸ்னோத் கர் வந்தனர். நிதானமாக ஆட்டத்தை தொடக்கிய ஸ்மித் (5) பொலக் பந்து வீச்சில் `ஸ்ரம்பிங்' செய்யப்பட்டார். அடுத்து யூசுப் பதான் வந்தார். இவர் (1) வந்த வேகத்தில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் களமிறங்கிய வாட்சன் அஸ்னாத்கருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மும்பை பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி குல்கர்ணி வீசிய 6 ஆவது ஓவரில் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 17 ஓட்டங்களை எடுத்தது. ஜெயசூரிய ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வாட்சன் மிரட்டினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை எடுத்த நிலையில், வாட்சன் பிராவோ பந்தில் போல்டானார். ஒரு சிக்சர், 4 பவுண்டரி விளாசிய இவர் 20 பந்தில் 32 ஓட்டங்களை எடுத்தார்.
ஒரு முனையில் வரிசையாக விக்கெட் விழுந்தாலும் அஸ்னாத்கர் அதிரடியாக விளையாடினார். கைவ் (4) மீண்டும் ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ரவீந்திர ஜடேஜா முதல் பந்திலேயே `டக்' அவுட்டானார். வோர்ன் 7 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவர்களைத் தொடர்ந்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அஸ்னாத்கரும் வெளியேறினார். இவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 35 பந்தில் 39 ஓட்டங்களை எடுத்தார்.
இந்நிலையில், 16 ஆவது ஓவரை வீசிய நெஹ்ரா வரிசையாக இரண்டு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.2 ஓவரில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்து வீசிய நெஹ்ரா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இலகுவான இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜெயசூரிய- தகவாலே அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். முனாப் வீசிய 4 ஆவது ஓவரில் ஜெயசூரிய ஒரு சிக்சர் அடித்தார். திரிவேதியின் அடுத்த ஓவரில் தகவாலே ஒரு சிக்சர் விளாசினார். ஜெயசூரியா 18 ஓட்டங்களுக்கு வாட்சன் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த உத்தப்பா வழக்கம் போல கலக்கினார். வாட்சன் வீசிய 10 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். திரிவோதிய வீசிய 13 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார், தகவாலே (27), வோர்ன் சுழலில் சிக்கினார். பிராவோ (1) வாட்சன் வேகத்தில் வெறியேறினார்.
பின்னர் அபிஷேக் நாயர்- உத்தப்பா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா (34), நாயர் (12) ஆட்டமிழக்காமலிருந்தனர். ஆட்ட நாயகன் விருதை நெஹ்ரா தட்டிச் சென்றார்.