Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
காட்டுமிராண்டித்தனங்களும் நாகரிகமடையாத அரசியலும்
[01 - June - 2008] [Font Size - A - A - A]
மப்ரூக்

இலங்கை இன்னும் சில காலத்துக்கு சுதந்திரம் பெறாமலேயே இருந்திருக்கலாம். வெள்ளைக்காரர்களின் நல்ல பழக்கவழக்கங்களையும், நாகரிகத்தையும் அப்போதாவது கொஞ்சூண்டு நாம் பழகி வைத்திருக்கலாமல்லவா? அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் அந்த மனிதர்கள் அரசியல் செய்யும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சிறிது காலத்துக்கு இலங்கை சுதந்திரம் பெறாமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது!

எதிரெதிர் அணிகளில் போட்டியிடும் இரு அபேட்சகர்கள், ஒரே மேடையில் இருந்து கொண்டு மாறாத புன்னகையுடன் தேர்தல் பிரசாரம் செய்யும் நாகரிகம் அழகு மிகுந்தவை! நமது நாட்டில் இதை விளையாட்டுக்குக் கூட, நினைத்துப் பார்க்க முடியாது. அப்படித்தான் இடம்பெறுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், கடைசியில் வடிவேல் சொல்வது போல்; அந்த மேடை "ரணகள பூமி' ஆகிவிடும்! "அப்படியென்றால், நாம் தொடர்ந்தும் வெள்ளையர்களின் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் உமக்குச் சம்மதமா' என்று உங்களில் ஒருவர் என்னைக் கேட்கலாம்! கொடூரம் மிக்க காட்டுமிராண்டிகளாக இருப்பதை விடவும், நாகரீகமான அடிமைகளாக இருந்து தொலைக்கலாம். தப்பில்லை!

கிழக்கு தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளையும் மனிதப்படுகொலைகளையும் காணும்போது, நாம் நாகரிகமடைய இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கின்றன போலவே தெரிகிறது! தமக்கு விருப்பமான அரசியல் கட்சியை ஆதரிக்கவும் அக்கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் ஒவ்வொருவருக்கும் பூரண அருகதையிருக்கின்றது. மனித உரிமை தொடக்கம், அடிப்படை உரிமைகள் வரை இதை உறுதி செய்கின்றன. தான் ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதற்கும் அக்கட்சியின் வெற்றிக்காக உழைப்பதற்கும் நபரொருவருக்குள்ள உரிமையை எவரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவ்வாறு தடுக்க முயற்சித்தல் என்பதே மிகப்பெரும் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறலும் தண்டிக்கத்தகு குற்றமுமாகும்!

ஒருவர் தனக்கு விருப்பமான கட்சியை ஆதரிக்கும் போது, மாற்றுத் தரப்பினரால் குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள் "துரோகிகளாகவும்', "காட்டிக் கொடுப்போர்' களாவும் பார்க்கப்படுகின்றார்கள். சிலவேளைகளில் தண்டிக்கவும் படுகின்றார்கள். இது எத்தனை பெரிய அறியாமை, கொடுமை, முட்டாள்தனம்! ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியையோ அல்லது குழுவையோ ஆதரிப்பதும் அதற்கு வாக்களிப்பதும் எவ்வாறு துரோகமாகி விட முடியும்! ஆனால், அப்படித்தான் பிற்போக்குத்தனமாக சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்!

முஸ்லிம்களிடையே குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே மேற்சொன்னவாறான மனோ நிலையை, 90 களுக்குப் பின்னர் வளர்த்து விட்டவர்களில் முதன்மையானவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நாம் குறித்துச் சொல்லலாம்! நமது இந்தக் கூற்றானது சிலருக்குக் கசப்பானதாகவும் சிலவேளைகளில் கோபத்தை உண்டுபண்ணக் கூடியதொன்றாகவும் அமையலாம். ஆனாலும், உண்மை அதுவாகத்தான் இருக்கின்றது. அஷ்ரப் அரசியலில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கிய காலத்தில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெருவாரியான மக்கள் ஐ.தே.கட்சிக்கே வாக்களிப்பவர்களாகக் காணப்பட்டனர். இந்நிலையானது மு.கா.வை. வளர்ப்பதில் அஷ்ரப் அவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது. ஐ.தே.கட்சியிலிருந்து அதன் ஆதரவாளர்களைப் பிரித்தெடுப்பதென்பதானது கடுமை மிக்கதோர் விடயமாகவே இருந்தது. எனவே, மு.கா. தவிர்ந்த ஏனைய கட்சிகளை, குறிப்பாக ஐ.தே.கட்சியை ஆதரித்தோரை "சமூக துரோகிக'ளாக அஷ்ரப் தனது அரசியல் மேடைகளிலெல்லாம் பிரகடனப்படுத்தினார். அவ்வாறானவர்களை "கோடாரிக் காம்பு'கள் எனும் பெயராலும் அழைத்து வந்தார்.

மாற்றுக் கட்சிக்காரர்களை மு.கா. தொண்டர்கள் தாக்கிய வேளைகளிலெல்லாம், அஷ்ரப் தனது மௌனத்தால் அதை ஆதரித்து நின்றார். சிலவேளையில் மௌனம் கலைந்தும் ஆதரித்தார். தேர்தல் காலமொன்றின் போது, அம்பாறை மாவட்டத்தில் ஒரு தடவை ஐ.தே.கட்சி ஆதரவாளரொருவரின் பலசரக்குக் கடையொன்றை மு.கா. தொண்டர்கள் சிலர் தீயிட்டு எரித்துவிட்டனர். சம்பவம் நீதிமன்றம் வரை சென்றது. அவ்வேளை, சந்தேக நபர்களாகக் குற்றம்சாட்டப்பட்ட மு.கா. தொண்டர்களின் சார்பாக வாதாடியவர் அஷ்ரப் அவர்கள்தான். முன்னணி சட்டத்தரணியான அவர், தனது கட்சித் தொண்டர்களுக்காக அந்த வழக்கை, பணம் எதுவும் பெறாமலேயே பேசி, விடுதலையினையும் பெற்றுக் கொடுத்திருந்தார். இதில் துயரமான செய்தி என்னவென்றால், அஷ்ரப் அவர்களால் அரசியலுக்காக வளர்த்தெடுக்கப்பட்ட இந்தப் பிற்போக்குவாதச் சிந்தனையானது, இன்று கிழக்கு மாகாணத்தில் அரசியல் மயப்பட்டுப் பரவிப்போயுள்ளதோடு, மு.காங்கிரஸுக்கெதிராகவும் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. ஆம், இப்போதெல்லாம் மு.காங்கிரஸ்காரர்களை ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களே "துரோகிகள்' என்றும் "கோடரிக்காம்புகள்' என்றெல்லாம் வசை கூறுவதோடு, அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டு வருகின்றனர்! "பொல்லைக் கொடுத்து அடி வாங்குதல்' என்பதற்கு இதைவிடவும் பொருத்தமான உதாரணமொன்று இருக்க முடியும் என்கிறீர்களா?

இந்தப் பின்னணியில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எல்.மசூர், மாற்றுக்கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் மு.கா. சார்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே பிரதேசத்தில் வெற்றிலைச் சின்னத்தில் உதுமாலெப்பை என்பவரும் கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட! கிட்டத்தட்ட 27 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற இவர், தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களில் இவரும் ஒருவர்! தவி சாளர் மசூரைத் தாக்கியவர்கள் இந்த உதுமாலெப்பையின் ஆட்களே என்பது மசூர் தரப்பினரின் குற்றச்சாட்டு. இதேவேளை, மு.கா.வின் இரண்டு தொண்டர்கள் வேறு, கடத்திச் செல்லப்பட்டு வாளால் வெட்டப்பட்டிருக்கின்றார்கள். பின்னர் விடுவிக்கப்பட்ட இவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருப்பதாகக் கேள்வி! கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையில் தேர்தல் வெற்றி ஊர்வலமொன்று நடத்தப்பட்டபோது, கல்முனைப் பிரதேசத்தில் வைத்து, ஊர்வலம் மீது மு.கா. ஆதரவாளர்களால் தாக்குதலொன்று நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை நமது கடந்த கட்டுரையொன்றிலும் பதிவு செய்திருந்தோம். ஆக கல்முனைச் சம்பவத்துக்குப் பதிலடியாகவே மசூர் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே பலரதும் எண்ணமாகும். கல் முனையில் தாக்கியதற்காக, அட்டாளைச்சேனையில் இருந்தவரை ஏன் பழிவாங்க வேண்டும் என்றுகேட்கிறீர்களா? முறி கண்டியில் கிளைமோர் வெடித்ததற்காய், தெஹிவளை ரயிலில் குண்டு வெடிக்கவில்லையா? அது போலத்தான்!!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் துயரம் மிகுந்தவை! இது திடீரென நிகழ்ந்ததொரு சம்பவமல்ல. இப்பிரதேசத்தில் வாழும் இந்து முஸ்லிம் மக்களின் நெஞ்சுக்குள் மிக நீண்ட நாட்களாக புகைந்து கிடந்த நெருப்புத்தான் தீயாக எரிந்திருக்கிறது. என்னதான் நாம் இரண்டு சமூகங்களின் உறவுகள் பற்றி வார்த்தைகளில் பேசினாலும், இன்னும் எங்களில், ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள பகைமையும் கடுப்பும் தீரவேயில்லை என்பதற்குரிய மிக மோசமான உதாரணம்தான் காத்தான்குடி, ஏறாவூர் சம்பவங்கள். யாரோ ஒரு சமூகத்தவன் மற்றைய சமூகத்தவனைத் தாக்குகின்றான் அல்லது கொலை செய்து விடுகிறான்! இதனைத் தொடர்ந்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகிறது. கொலையானவனின் சமூகத்தோர் தமது கையில் அகப்படும் கொலை புரிந்தவனின் சமூக நபர்கள் மீது பதில் தாக்குதலை நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆனால், இந்தப் பதில் தாக்குதலில் பலியாகுபவனுக்கும் மேற்குறித்த சம்பவத்துக்கும் எந்தவிதத் தொடர்புமே இருக்காது. இதுதான் இன்று நடக்கும் சமூகக் கலவரங்கள் பற்றிய கதைச் சுருக்கம். இந்தக் காட்டுமிராண்டித் தனங்களிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஒரு இந்துவை முஸ்லிமோ, முஸ்லிமை இந்துவோ தாக்கி விட்டால்...அதை இரண்டு நபர்களுக்கிடையிலான முரண்பாடாக மட்டுமே நாம் கருதிச் செயற்படல் வேண்டுமேயன்றி இனரீதியில் இதை ஒருபோதும் அணுகுதல் ஆகாது. இந்த மனப்பக்குவம் நமக்குள் ஏற்படல் வேண்டும்.

இதற்கான மனமாற்றத்தை இரண்டு சமூகங்களுக்குள்ளும் இருக்கின்ற ""மனிதாபிமானம்' கொண்டோர் அடுத்தவருக்குள் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்த மாற்றம் ஏற்படாதவரை பலியாகிக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களின் சடலங்களை நாம் பத்திரிகைகளில் எண்ணிக்கொண்டிருக்கும் சாபத்தை அனுபவித்தே தீர வேண்டும்! வேறு வழியில்லை.

கிழக்கு மாகாணத் தேர்தல் பிரசாரங்களின் போது நமது முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்து வந்த கருத்தொன்றை நண்பரொருவர் ஞாபகப்படுத்தினார். ""அதிக ஆசனங்களைப் பெறுகின்ற தரப்புக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது. வெற்றிலைச் சின்னத்தில் முஸ்லிம் தரப்பு அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிக்கு மு.கா.தலைவர் ஹக்கீம்தான் தடையாக இருக்கின்றார். சிலவேளை வெற்றிலைச் சின்னத்தில் குறைந்த முஸ்லிம் ஆசனங்களைப் பெற்று நாம் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமாயின் அந்தப் பிழைக்கான முழுப் பொறுப்பும் ஹக்கீமையே சாரும்' என்று அபேட்சகர்கள் தொடக்கம் அத்தனை அமைச்சர்களும் கோரசாகப் பாட்டுப்பாடியதை நண்பர் ஞாபகப்படுத்தினார்.

ஆனால், முஸ்லிம் தரப்புத்தானே இப்போது வெற்றிலைச் சின்னம் சார்பாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது. எங்கே முஸ்லிம் முதலமைச்சர்? இப்போது நிகழ்ந்துள்ள தவறுக்கு யார் பொறுப்பு? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை வைத்துக் கொண்டு கிழக்கு முஸ்லிம்கள் நமது அமைச்சர்மார்களைக் காத்துக் கொண்டிருப்பதாகவும் நண்பர் நம்மிடம் சொன்னார்.

பத்திரிகையாளரான நண்பரொருவரை சில தினங்களுக்கு முன்னர் சந்திக்கக் கிடைத்தது. நண்பர் சோகத்துடன் காணப்பட்டார். விபரம் கேட்டேன். வெளியூரைச் சேர்ந்த அவரின் தாயார் தொலைபேசியில் மகனிடம் தொழிலை உதறி விட்டு ஊர்வரும் படி அழுதிருக்கின்றார். "த நேசன்' பத்திரிகையின் இணையாசிரியர் கடத்தித் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டதன் விளைவுதான் தாயாரின் அந்த அழுகைக்கும் வேண்டுகோளுக்கும் காரணமாம். ""பிச்சை எடுத்தாலும் பிழைத்துக் கொள்ளலாம். இந்தத் தொழில் வேண்டாம். நீ ஊருக்கு வா மேனே' என்று வேறு கூறினாராம் அவர். ஆமாம், நண்பரின் தாயார் சொன்னதில் உண்மைகள் இல்லாமலுமில்லை. பிச்சைக்காரர்களை யாரும் அச்சுறுத்துவதில்லை. பிச்சைக்காரர்களை யாரும் வானில் வந்து கடத்துவதில்லை. பிச்சைக்காரர்களை யாரும் கொலை செய்துவிட்டு வீதியோரங்களில் போட்டுச் செல்வதுமில்லை. யோசித்துப் பார்த்தால் ஊடகத் தொழிலை விடவும் பிச்சையெடுப்பதில் அதிக சுதந்திரம் உள்ளதாகவே தோன்றுகிறது.

Email this page Your Opinion Print this page
குடாநாடு மீது புலிகள் கடல்வழி முற்றுகையா?
மன்மோகன் வருகையை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி
அச்சுறுத்தலுக்குள் ஊடகத்துறை!
ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்!
காட்டுமிராண்டித்தனங்களும் நாகரிகமடையாத அரசியலும்
இனமுறை ஏற்படுத்துவதற்கு கிழக்கில் தொடர்ந்து முயற்சி
செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் படுகொலை: விசாரணைக்கு என்ன நடந்தது?
ஜி.எஸ்.பி. பிளஸ் நலன்களை தொடர்ந்தும் தக்கவைப்பது இலங்கைக்கு சாத்தியமா?
ஐ.நா.வின் அங்கீகாரமும் சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளும்
இரத்தம் சிந்தும் குஜ்ஜார் இன மக்கள்
மகிந்த யுகம் உதயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com