அஜாதசத்ரு
ஊடக சுதந்திரத்திற்கு எதிராக ஆளும் தரப்பினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மிக மோசமானளவில் அதிகரித்துள்ளதையே அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த சில தினங்களில் நேஷன் வார வெளியீட்டு ஆங்கிலப் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பான ஆய்வாளருமான கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை. எம்.ரி.வி. நிறுவனத்தினத்தின் சக்தி தொலைக்காட்சியின் யாழ்குடாநாட்டின் செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டமை மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவினால் நேரடியாக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் என்பன இதனையே தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.
முன்னொரு போதுமில்லாதளவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக்காலத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனம், முஸ்லிம் மீடியா போரம் என்பன கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளன.
இதனை விட சர்வதேச ஊடக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடக சுதந்திரத்தை மிக மோசமாக நசுக்கி ஒடுக்கிப் படுகொலைக் கலாசாரமொன்றை உருவாக்கும் உலக நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை வகிப்பதாக கடந்த வருட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் முதலிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையே தோற்றுவித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அரச தரப்பினரின் துஷ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகள், அதிகார அடாவடித்தனங்கள் என்பவற்றை வெளிக்கொண்டுவந்த தனியார் மற்றும் அரச தரப்பில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் அண்மைய காலங்களில் மிகமோசமாகத் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர்.
அரச கட்டுப்பாட்டில் இயங்கும் ஆளும் தரப்பினருக்கு ஆதரவான அல்லது செல்வாக்கைத் திரட்டும் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டுவரும் ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மீது அரச தரப்பு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக அரச தரப்பினரால் ரூபவாஹினி செய்திப் பணிப்பாளர் உள்ளக இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் 20 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரகசிய பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனைவிட பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள், பெண்ணொருவர் உட்பட நால்வர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினர்.
மேலும், பல பணியாளர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் பல தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச கட்டுப்பாட்டிலுள்ள, ஆட்சியாளர்களுக்கு சாதகமான தகவல்களை மாத்திரம் வெளியிட்டு வரும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், பணியாளர்களுக்கே இவ்வாறான கடுமையான அச்சுறுத்தல் என்றால் ஏனைய தனியார் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள் எவ்வாறான பாரிய கடும் நெருக்குதல்களையும் கொலை அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல.
கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேஷன்' ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும் பாதுகாப்பு ஆய்வாளருமான கீத் நொயார் அலுவலகத்திலிருந்து கடமை முடிந்து வீடு திரும்பிச் செல்கையில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு மிக மோசமான முறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அலுவலக கடமை முடிந்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கீத் நொயார் தெகிவளை வைத்தியா வீதியில் (வீட்டுக்கு அருகாமையில் வைத்து) இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
"த நேஷன்' ஆங்கில வாரப் பத்திரிகையில் வெளிவரும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைக்கான தகவல்களை எந்த உயரதிகாரிகள் வழங்குகின்றார்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்குமாறு கூறியே இனந்தெரியாத மறைவிடமொன்றில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஏழரை மணித்தியலயங்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பான தகவல்களை தருபவர்கள் எவரென்று கேட்கப்பட்ட நிலையிலேயே கீத் நோயார் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் நாட்டின் பிரதான ஐந்து ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் வெளிக்காட்டின.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த முக்கியஸ்தர்களான உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூரிய, செயலாளர் போத்தல ஜயந்த ஆகியோர் கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவினால் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய நலன்கள் தொடர்பாகவோ, பாதுகாப்புப் படையினர் தொடர்பாகவோ எந்தவொரு தகவல்களையும் வெளியிட எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை மாலை யாழ்.குடா நாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும் அவருடன் சென்ற மேலுமொரு இளைஞரும் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சக்தி தொலைக்காட்சி மற்றும் வானொலியின் யாழ்.குடாநாட்டின் செய்தியாளரான பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது 34) அவரது சொந்த இடமான அராலிக்கு கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் கல்லுண்டாய் வெளியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கோரத்தனமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது நண்பரும் யாழ். மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) முக்கியஸ்தர்களில் ஒருவரான வள்ளுவன் என்பவரின் புதல்வரும் யாழ். கச்சேரி ஊழியருமான மகேந்திரன் வரதன் (வயது 28) என்பவரும் இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரின் காவலரணுக்கு மிகவும் அண்மித்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒன்பது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை உரிய விசாரணைகள் நடத்தப்படவுமில்லையென்றே பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதனைவிட பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர். சில ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தினக்குரல், சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளுக்கு குறிப்பிட்ட காலம் தடை விதிக்கப்பட்ட ஊடக சுதந்திரத்துறையை அவமதிக்கும் சம்பவங்களும் கடந்தகாலங்களில் இடம்பெற்ற போது அரசதரப்பினருக்கு அது தொடர்பாக முறையிடப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கையெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைவிட கடந்த இரண்டு மாதகாலத்திற்கும் மேலாக ஊடகவியலாளர்களான எஸ். திசநாயகம், யசிதரன் மற்றும் யசிதரனின் மனைவி ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கைதான சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளருமான எஸ். சிவகுமார் பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஊடக சுதந்திரத் துறைக்கெதிராக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஒவ்வொரு சம்பவங்களும் ஊடக சுதந்திரத்துறையை நசுக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு தள்ளுவதற்கான நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றது.