கலைஞன்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜூலை 27 ஆம் திகதி நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ள இலங்கை அரசு அதற்கான சகல நடவடிக்கைகளையும் இப்போதே ஆரம்பித்து விட்டது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கமான "சார்க்'கின் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக இலங்கையரசு அறிவித்துள்ளது.
இச்சார்க் உச்சி மாநாடு இரு வருடங்களுக்கொரு தடவை ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை. கடந்த முறை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இம்முறை சார்க் மாநாட்டை இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சார்க் அமைப்பில் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான்,. இலங்கை ஆகிய எட்டு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் தலைவர்களே இம்மாநாட்டில் பங்கேற்பார்கள். அந்த வகையில் ஜூலை 27 ஆம் திகதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் இந்நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையில் சார்க் மாநாட்டை கொழும்பில் நடத்த முடியுமாவென்ற கேள்வியும் பல தரப்புகளிடமிருந்து எழுப்பப்பட்டுள்ள நிலையில் சார்க் மாநாட்டை கொழும்பில் நடத்தியே தீரவேண்டுமென்பதில் இலங்கை அரசு மிகத் தீவிரமாகவுள்ளது.
யுத்தம், மனித உரிமை மீறல்கள், பொருளாதார சீரழிவுகள் என சர்வதேசம் முன் தலைகுனிந்துள்ள இலங்கையரசு இம்மாநாட்டை சிறப்புற நடத்தி இலங்கை மிகவும் சிறந்ததொரு நாடென உலகிற்கு காட்டமுற்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தெரிவு செய்யப்படாமையால் ஏற்பட்ட களங்கத்தையும் இம்மாநாட்டின் மூலம் போக்கலாமென இலங்கையரசு கருதுகிறது.
இலங்கையரசின் எண்ணம் இவ்வாறிருக்க கொழும்பில் சார்க் மாநாட்டை நடத்துவது பாதுகாப்பானதாவென்ற சந்தேகம் சில நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் சீல்காந்தசர்மா இலங்கைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து சார்க் மாநாடு தொடர்பாகவும் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார். இச்சந்திப்பின் போது, சார்க் மாநாட்டுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை ஜனாதிபதி சார்க்கில் பங்கேற்கும் 1200 பேராளர்கள் தங்குவதற்கான ஹோட்டல்கள் கூட தெரிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இச்சந்திப்பில் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகவே கூடுதலாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை, சார்க் மாநாட்டில் ஒரு நாட்டின் தலைவர் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட உச்சி மாநாட்டை நடத்த முடியாதென்பதால் அனைத்து நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்க இலங்கையரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகை தொடர்பாகவே இலங்கை கவலையடைந்துள்ளது.
ஏற்கனவே, இலங்கையின் கடந்த சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரென இலங்கையரசால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் தான் வருவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், இலங்கையின் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதற்கு இந்தியாவில் பல தரப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழரை படுகொலை செய்யும் சிங்கள அரசின் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதென தமிழகத்தின் பல கட்சிகளும் போர்க் கொடி தூக்கின. இதனால் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்தியப் பிரதமரின் வருகை மூலம் இலங்கைத் தமிழருக்கெதிரான போருக்கு இந்தியாவின் ஆசீர்வாதம் உண்டென காட்ட முற்பட்ட இலங்கையரசு முகத்தில் கரி பூசிக் கொண்டது. அவ்வாறானதொரு நிலை சார்க் உச்சி மாநாட்டிலும் ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் இலங்கையரசு மிகக் கவனமாகவுள்ளது.
இலங்கையில் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் கொழும்பில் நடைபெறவிருந்த சார்க் உச்சி மாநாட்டில் அப்போதைய இந்தியப் பிரதமரான நரசிம்மராவ் இறுதி நேரத்தில் கலந்து கொள்ள மறுத்ததால் சார்க் உச்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை இலங்கையரசுக்கு ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டே தற்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகையை உறுதிப்படுத்துவதில் இலங்கை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசை திருப்திப்படுத்தி அதன் மூலம் பயன்களை அடைய இலங்கையரசு ஒருபுறத்தில் முயன்றாலும் மறுபுறத்தில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் இந்திய அரசுக்கு நெருக்கடிகளை கொடுப்பதாகவே காணப்படுகின்றது.
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் கைதுகள், தாக்குதல்கள், தமிழக மீனவரிடையே கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீனவர்கள் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இது தொடர்பில் தமிழக அரசுக்கும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்குள்ளேயே 45 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏற்கனவே பல தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை விடுதலையின்றி இலங்கைச் சிறையில் வாடுகின்றனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்கக் கோரி தற்போது தமிழக கட்சிகள் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழக அரசும் மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. ஆனால், மத்திய அரசோ இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தம்மால் தடுக்க முடியாது. இலங்கை எல்லைக்குள் இவர்கள் செல்வதால் தானே தாக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படை தாக்குவதை குறை கூறவும் முடியாதெனக் கூறி விட்டது.
இவ்வாறான நிலையில் இலங்கையரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தமிழக அரசியல் கட்சிகளும் மீனவர் அமைப்புகளும் அறிவித்துள்ளன.
இதற்கிடையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவேண்டுமென பாரதீய ஜனதாக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அமைதியை உருவாக்க உதவுதாக கூறிக் கொண்டு இலங்கையரசு ஆயுத தளபாடங்கள் வாங்குவதற்கு இந்திய அரசு உதவுவது எவ்வகையிலும் நியாயமில்லையெனக் கூறியுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு என்னவெனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் சாக்குப் போக்காகத்தன்னும் சில நடவடிக்கைகளையெடுக்காது விட்டால் தமிழக வாக்கு வங்கி காலியாகிவிடுமென்பது ஆட்சியிலுள்ள காங்கிரஸுக்கு நன்கு தெரியுமென்பதால் சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய நிலை ஆட்சியிலுள்ளவர்களுக்குண்டு. எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பொறுத்தே பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கைக்கான விஜயம் உறுதி செய்யப்படும்.
ரணிலின் மனைவி செய்த யாகம்
இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க அண்மையில் தேனி மாவட்டத்துக்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். தேனி மாவட்டத்திலுள்ள பிரபல்யமிக்க குச்சனூர் சனீஸ்வரன் கோயிலுக்கு கடந்த 24 ஆம் திகதி மைத்திரி விக்கிரமசிங்க வந்திருந்தார். அவருடன் இன்னும் 12 பேர் வந்திருந்தனர்.
மைத்திரியின் துணைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜாதகத்தை பார்த்த போது அவருக்கு ஜென்ம சனி பாதிப்பு இருப்பதால் உடல் நலம் சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொள்ள தென்மேற்குப் பகுதியிலுள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் வேண்டுதல் செய்துகொள்ளுமாறு ஜோதிடர்கள் கூறிய அறிவுரையையடுத்தே மைத்திரி விக்கிரமசிங்க கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் குச்சனூர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றிருந்தார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் தோஷங்கள் நீங்கிவிட்டதாக ஜோதிடர்கள் கூறியதையடுத்து நன்றிப் பரிகாரம் செய்வதற்காகவே மைத்திரி மீண்டும் குச்சனூர் வந்தார்.
அரசியல் பிரமுகரின் அதிகாரபூர்வ விஜயமென்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக செய்யவேண்டுமென்பதாலும் சிலவேளைகளில் யாராவது கறுப்பக் கொடிகளை காட்டி எதிர்ப்புத் தெரிவித்துவிடலாமென்பதாலேயே விஜயம் ரகசியமாகவும் சாதாரணமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், சில ஊடகங்களுக்கு விடயம் கசிந்ததால் அவர்கள் முன்னரே அங்கு சென்று காத்திருந்தனர்.
மைத்திரியின் பரிகார பூஜைகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பாசறையைச் சேர்ந்த போடி பன்னீர்செல்வம் சகல உதவிகளையும் செய்திருந்தார். இதையடுத்து, கடந்த 24 ஆம் திகதி மிகச் சாதாரணமாக 12 பேர் சகிதம் குச்சனூர் கோயிலுக்கு மைத்திரி வந்திறங்கினார்.
குச்சனூர் கோயில் தலைமைப்பூசாரி ஜெயபால் பூஜைகளுக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயாராகவிருந்தார். அர்ச்சகர்களும் தயார் நிலயில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயுள் வேண்டி பரிகார பூஜை என்பதால் 19 விளக்குகள் ஏற்றப்பட்டு 19 வெற்றிலைகளில் நாணயங்கள் வைக்கப்பட்டு மாலையாக கட்டப்பட்டிருந்தன.
மைத்திரி ஆலயம் வந்தடைந்ததும் அதனை அவரின் கைகளில் கொடுத்து சில விசேட மந்திரங்களை ஓதி பூஜைகள், யாகங்களை செய்த அர்ச்சகர்கள் அந்த மாலையை எருமைக் கன்று ஒன்றின் கழுத்தில் போடுமாறு மைத்திரியிடம் கொடுத்தனர். அவரும் மிகவும் பவ்வியமாக எருமைக் கன்றின் கழுத்தில் அந்த மாலையை போட்டு தனது கணவனின் ஆயுளுக்காக வேண்டிக் கொண்டார்.
பின்னர் அந்த எருமைக் கன்றை கயிறு கட்டி அழைத்துக் கொண்டு குச்சனூர் கோயிலை 19 தடவைகள் சுற்றி வலம் வந்தார். எருமைக் கன்றும் அவர் பின்னால் மிகவும் சாதுவாக சுற்றிவந்தது.
எருமைக் கன்றுடன் கோயிலை 19 தடவைகள் சுற்றிவந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரில் சனீஸ்வரனுக்கு விசேட பூஜை செய்யப்பட்டது. அத்துடன், 19 பேருக்கு தட்சணையும் அன்னதானமும் வழங்கப்பட்ட பின்னர் எருமைக் கன்றை குச்சனூர் கோயிலுக்கே தானமாக மைத்திரி விக்கிரமசிங்க வழங்கினார்.
இந்நிகழ்வுகளை ஊடகவியலாளர்கள் சேகரிக்க ஆரம்பத்தில் கெடுபிடி இருந்தபோதும் பின்னர் அனுமதி வழங்கினர்.
தன் கணவனின் ஆயுளுக்காக குச்சனூர் கோயிலுக்குவந்து பக்திப் பரவசமாக விளக்கேற்றி, வெற்றிலைமாலை போட்டு, கன்றுக்குட்டி தானம் செய்து பரிகாரம் செய்த பௌத்த பெண்ணான மைத்திரியை பார்த்து அங்கு குழுமியிருந்த பெண்கள் கண்கலங்கி மெய் சிலிர்த்துப் போயிருந்தனர்.
சுடிதாருடனும் "பொப் கட்' முடியுடனும் எருமைக் கன்றுடன் கோயிலை சுற்றிவந்த பெண்மணி யாரென தெரியாமல் முதலில் விழித்த பலரும் பின்னர் அவர் யாரெனத் தெரிந்ததும் ஆச்சரியமடைந்தனர்.