Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
டெங்கு ஒழிப்பு இயக்கத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
[01 - June - 2008] [Font Size - A - A - A]
ஒவ்வொரு வருடமும் மே ஜூன் மாதங்களிலேயே டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழமை. கடுமையான உஷ்ணத்துக்கு மத்தியிலும் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக தலைநகர் கொழும்பில் அடிக்கடி மழைபெய்கிறது. இதன் காரணத்தினால் டெங்கு நோய் அபாயம் மீண்டும் அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்திருக்கும் தகவல்கள் அச்சம் தருபவையாக அமைந்திருக்கின்றன. கொழும்பிலே டெங்கு நோயாளர்களில் 95 சதவீத அதிகரிப்பு இப்போது ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை, மே மாத இறுதிவரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வருடம் இதுவரை கொழும்பு நகரில் 3 டெங்கு நோயாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த வருடம் முழுவதுமே டெங்குநோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்று மாத்திரமேயாகும். டாக்டர் காரியவசம் தெரிவித்திருக்கும் தகவல்களின் படி நோக்குகையில்; தலைநகரிலே டெங்கு நோயினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பாடசாலை மாணவர்களேயாகும். தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவிருப்பதால் டெங்கு பரவல் நிலைவரம் படுமோசமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்புக் கிடைப்பதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் குறைகூறிக்கொண்டேயிருக்கிறார்கள். டாக்டர் காரியவசம் இத்தடவையும் இக்குற்றச்சாட்டை முன்வைக்கத் தவறவில்லை. டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி எமது சுற்றாடலைத் துப்புரவாக வைத்திருப்பதற்கு செம்மையான முறையில் வகுக்கப்படும் திட்டங்களைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதேயாகும். டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கக்கூடிய வகையில் சுற்றாடலின் சுகாதாரம் பேணப்பட வேண்டும். குறிப்பாக சுற்றாடலில் நீர் தேங்கி நிற்கக் கூடிய சாத்தியப்பாடுகளை இல்லாதொழிக்க வேண்டும். மக்கள் தங்கள் சுற்றாடலைத் தொடர்ச்சியாகத் துப்புரவு செய்து டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலைகளை நிர்மூலஞ்செய்ய வேண்டும். தலைநகரிலே அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் டெங்கை ஒழித்துக் கட்டுவதற்கான இயக்கமொன்றை கொழும்பு மாநகரசபை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருக்கிறது. இந்த இயக்கம் பிரதானமாக டெங்கு நோயைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் தங்களது சுற்றாடலைத் துப்புரவாக வைத்திருக்குமாறு மாநகரசபை விடுக்கும் வேண்டுகோளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இசைவாகச் செயற்படத் தவறுபவர்களை சட்டரீதியாகத் தண்டிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

2006 ஆம் ஆண்டில் கொழும்பு நகர சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தின் விளைவாக கடந்த வருடம் டெங்கு நோய் ஆபத்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கும் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டெங்கு ஒழிப்பு இயக்கம் காரணமாக இவ்வருடமும் டெங்கு பேராபத்தைத் தரக்கூடிய நிலைமை தவிர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். கொழும்பு மாநகர சபையின் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை பல நாடுகள் முன்மாதிரியாகப் பின்பற்றத் தொடங்கியிருப்பதாகக் கூறும் டாக்டர் காரியவசம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களது பணியை பயனுறுதியுடைய முறையிலேயே செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். டெங்கு நுளம்பு பெருகக் கூடிய ஒரு நீர் நிலையை அல்லது அசுத்தமான இடத்தை கண்டு பிடிக்கத்தவறினால் 15 பேருக்கு டெங்கு நோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நுளம்பு பெருகக் கூடியதாக தங்களது சுற்றாடலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் 100 குழுக்கள் நேற்று முன்தினம் கொழும்பு பூராவும் பணிக்கமர்த்தப்பட்டன. இக்குழுக்கள் ஒவ்வொன்றிலும் இரு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கியிருந்தனர்.

பொதுமக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற சுகாதாரத்துறை அதிகாரிகளின் குற்றச்சாட்டில் இருக்கின்ற நியாயத்தை நாம் ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற சுகாதார சேவை மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் அலட்சிய மனோபாவம் இருப்பதாக பொது அமைப்புகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டையும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. டெங்கு அபாயத்தை வெற்றி கொள்வதற்கு ஒவ்வொரு பிரஜையினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானது என்பதையும் இது ஒரு தேசியப்பணி என்பதையும் மனதில் கொண்டு கொழும்பு மாநகர சபை முன்னெடுத்திருக்கும் டெங்கு ஒழிப்பு இயக்கத்துக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். இதே போன்ற டெங்கு ஒழிப்புத் திட்டங்களை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளும் முன்னெடுக்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com