வாஷிங்டன் :சர்வதேச விண்வெளிக்கூடத்தில் கழிவறை பழுதானதால், புதிய உதிரிப் பாகங்களை நாசா மையம் விண்வெளிக்கு அனுப்புகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் 3 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் விண்கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கழிவறை இயந்திரங்கள் பழுதாயின.
இதனால் இயற்கை உபாதையை தள்ளிப்போட முடியாமல் விண்வெளி வீரர்கள் அல்லல்படுகின்றனர். அவர்களின் அவசரத்தை சமாளிக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மனித உழைப்பு வீணாகிறது. தேவையற்ற அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. கழிவறையை சீர்செய்ய தேவையான உதிரிப் பாகங்களை விண்வெளிக்கு அனுப்புகிறோம் என்று நாசா விஞ்ஞானி ஷியார்மேன் தெரிவித்தார்.
கென்னடி விமான தளத்திலிருந்து சனிக்கிழமை புறப்படும் டிஸ்கவரி விண் ஓடத்தில் உதிரிப் பாகங்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.