காத்மண்டு : நேபாளத்தில் அரண்மனையிலிருந்து மன்னர் கயனேந்திரா நள்ளிரவு திடீரென வெளியேறினார் என்று வந்த செய்தியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், இந்தச் செய்தியை மன்னரின் செயலாளர் பசுபதி பக்த மகார்ஜன் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும் திட்டம் எதுவும் மன்னரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
நேபாளத்தில் 240 ஆண்டு கால மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அண்மையில் குடியரசு ஆட்சி மலர்ந்தது.
இதையடுத்து, மன்னர் கயனேந்திரா உள்ளிட்ட அரச குடும்பத்தினர் வசித்து வரும் நாராயணஹிட்டி மாளிகையை 15 நாட்களுக்குள் காலி செய்து தரும்படி அந்நாட்டு அரசு மன்னருக்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், மன்னர் கயனேந்திராவின் அரண்மனை முன் வியாழக்கிழமை நள்ளிரவு திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மன்னர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரண்மனை வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மன்னர் கயனேந்திரா அரண்மனையை விட்டு நள்ளிரவே வெளியேறியதாக செய்தி பரவியது.
மேலும் நேபாளத்தை விட்டு வெளியேற அவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்த மன்னரின் தனிச் செயலர் மகார்ஜன், நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும் திட்டம் ஏதும் மன்னரிடம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த மன்னரின் ஆதரவு கட்சியான ராஷ்டிரிய பிரஜதந்த்ரா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குந்தி சாஹி, "அரச குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து, அவர்கள் தங்குவதற்கு போதிய வசதியை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை' என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மன்னர் ஆட்சி ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே கட்சி ராஷ்டிரிய பிரஜதந்த்ரா கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் அரண்மனையை காலி செய்தவுடன், அது அருங்காட்சியகமாக மாற்றப்படும் என நேபாள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபால்மன் ஸ்ரீஸ்தா தெரிவித்தார்.