ஸ்டொக்ஹோல்ம்: ஈராக்கின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்துள்ளதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
பேரழிவிலிருந்து ஈராக் மீண்டுள்ளதாக தெரிவித்த பான் ஆனால், நிலைமை தொடர்ந்தும் ஸ்திரமற்றுக் காணப்படுவதாக எச்சரித்துள்ளார்.
சுவீடனில் நடைபெறும் ஈராக்கின் நிலைமை தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் மாநாட்டிலேயே பான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈராக்கின் கடன் சுமைகளை இரத்து செய்யுமாறு அரேபிய நாடுகளுக்கு ஈராக்கிய பிரதமர் நூரி மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குமான ஈராக்கின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நடத்தப்படும் இம் மாநாட்டில் சுமார் 100 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இம் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பான்;
ஈராக் ஒரு வறிய நாடல்ல. இது அதிகளவான மனித மற்றும் பௌதிக வளங்களைக் கொண்ட நாடு. ஆனால், இந்நாட்டின் சர்வாதிகாரியினால் தோன்றிய கடன் சுமை அதன் மீள் கட்டுமான முயற்சிகளுக்கு தடையாக உள்ளது. ஈராக்கின் தற்போதைய நிலைமையை ஒரு வார்த்தையில் வர்ணிப்பதானால் "நம்பிக்கை' என்னும் ஒரு சொல்லையே நான் தெரிவு செய்வேன். தமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான சவால்களை நம்பிக்கை எனும் ஆயுதத்தைக் கொண்டே ஈராக்கிய அரசாங்கமும் மக்களும் எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈராக்கின் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பக்கபலமாக இருக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈராக்கின் மொத்த கடன்தொகை 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அத்துடன், வளைகுடா போரின் போதான இழப்புகளுக்கு ஈராக் 28 பில்லியன் டொலர்கள் நஷ்டஈட்டை வழங்க வேண்டியுள்ளது.
இதனாலேயே ஈராக்கின் கடன் சுமைகளை குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் இரத்துச் செய்ய வேண்டுமென ஈராக்கிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.