இஸ்லாமாபாத் : தனது தாய் வழியைப் பின்பற்றி மக்களுக்கு தான் சேவை செய்ய விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் (17 வயது) தெரிவித்தார்.
டுபாயில் தங்கிக் கல்வி பயன்று வரும் பக்தவர், வெள்ளிக்கிழமை "ஒன்வேல்டு' என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். பெனாசிர் அரசியல் வாழ்க்கை மூலம் பாகிஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்பினார். அதுபோல் நீங்களும் அரசியல் மூலம் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பக்தவர், அரசியலில் தடம்பதிக்கும் எண்ணமும், திட்டமும் தற்போது தனக்கு இல்லை. தனது முழுக் கவனத்தையும் படிப்பின் மீது செலுத்தவே விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும் தனது தாயின் மரணம் குறித்து கவலை தெரிவித்த அவர், தனது தாயின் தீவிரமான சேவையைப் பார்த்து அச்சமடைந்தவர்களே அவரை தீர்த்துக்கட்டிவிட்டதாகவும் கூறினார்.
பாகிஸ்தானில் அனைவருக்கும் கல்வி வழங்குவதே தனது தாயின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் மறைந்தாலும் அவரது இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற தான் உறுதி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் சிறுவயதில் இருந்தே இசை மீது அதிக நாட்டம் கொண்டவர் பக்தவர். தனது இசை ஆர்வத்தைப் பார்த்த தனது தாயார் பெனாசிர் சிறந்த பாடகராகவும், அதையே தொழிலாக மேற்கொள்ளவும் முயற்சிக்குமாறு தன்னிடம் அன்பான யோசனை வழங்கியதாகவும் பக்தவர் நினைவுகூர்ந்தார்.