*இந்தவாரம் முதல் போராட்டம்
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி இவ்வாரம் முதல் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளரும், எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;
""வாழ்க்கைச் செலவு என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம்
தனியார் மற்றும் அரச துறையினரை பெருமளவில் பாதித்திருக்கிறது. குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மக்களையே பாதிக்கிறது. அவர்களே இச்சாபக்கேட்டை தலையில் சுமக்க வேண்டியுள்ளது. ஊழல் நடவடிக்கைகள் குறைந்தாலேயே வாழ்க்கைச் செலவு தானாகவே குறைந்து விடும்.
ஒரு புறம் ஊழல், மறுபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர் கொள்ளும் இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நோக்கிலும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் பட்டிணியின்றி வாழ்வதையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் ஜே.வி.பி. இவ்வாரம் தொடக்கம் வீதிக்கு இறங்குகிறது.
ஜே.வி.பி. வீதிக்கு இறங்க அடிப்படைக் காரணம், தனியாருக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தியேயாகும். அத்துடன், பொருட்களின் விலைகளை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோருவதும் இதன் நோக்கமாகும்.
நாட்டை நேசிக்கும் சக்திகள் அனைவருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென ஜே.வி.பி. அழைப்பு விடுக்கிறது. எமது கட்சியின் தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.