Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
மனித உரிமைகள் தொடர்பாக மீண்டும் இலங்கைக்கு பரீட்சை
[01 - June - 2008] [Font Size - A - A - A]
* ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராயும் முக்கிய கூட்டத்தொடர் நாளை 2 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் நிலைவரம் குறித்து ஆராய்ந்து, முக்கிய தீர்மானம் மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான தேர்தலில் இலங்கை தோல்வியடைந்த நிலையில் ஜெனீவாவில் ஆரம்பமாகும் கூட்டத்தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணை நிறைவேற்ற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை தடுக்கும் தீவிர முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன்பொருட்டு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியூயோர்க் சென்று அங்கு சர்வதேச சமூகத்தினரை சந்தித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனப் பிரேரணையை வாபஸ் பெறச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் அடுத்த வாரம் இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இங்குள்ள நிலைவரத்தை ஆராய்ந்து ஒன்றியத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்களெனவும் அதனையடுத்தே இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுமெனவும் அறியவருகிறது.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமை மீறல் குறித்து ஆராயும் அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் உடனடியாக சமர்ப்பிக்கலாமெனவும் அவ்வாறு உடனடியாக சமர்ப்பிக்க சாத்தியமில்லையெனவும் இரு வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயமே சர்வதேச சமூகம் இலங்கையை ஓரங்கட்டுவது தொடர்பில் முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ள உதவுமெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்விடயங்கள் குறித்து மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தகவல் தருகையில்;

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் நான் 13 ஆம் திகதி அறிக்கையை சமர்ப்பிப்பேன். எமக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எனினும் உள்நாட்டுப் போர் குறித்து சர்வதேச சமூகம் மறந்துவிடாதென்ற நம்பிக்கை உள்ளதென்றார்.

இது குறித்து மாற்றுக்கொள்கை நிலையப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறும் போது;

ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் இலங்கை வருகையும் மிகமுக்கியத்துவம் வாயந்தவையாகும். முக்கியமான சர்வதேச அமைப்புகள் சிலவும் இத்தறுவாயிலேயே அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இவை தாக்கத்தை ஏற்படுத்தலாமென்றார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான தேர்தல் தோல்வியிலிருந்து இலங்கை எத்தகைய பாடங்களையும் கற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் ஆட்கடத்தலும் காணமல் போதலும் ஊடக அடக்குமுறையும் அரசாங்கத்தின், அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான அச்சுறுத்தல்களும் அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச சமூகத்தின் கடும் நெருக்குவாரத்திலிருந்து இலங்கை தப்புவதற்கான வாய்ப்புகள் குறைவானதாகவே உள்ளதாக சுயாதீனத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com