இரு கால்களிலும் முழங்காலுக்கு கீழ் பகுதியை இழந்த ஓட்டவீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் தகுதியைப் பெறுவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்.
21 வயதான பிஸ்டோரியஸ் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். உடற்குறைபாட்டுடன் பிறந்த அவரின் கால்களின் முழங்காலுக்கு கீழ்பட்ட பகுதிகள் 11 மாத வயதிலேயே அகற்றப்பட்டன. ஆனால், சோர்ந்துவிடாமல் செயற்கை கால்களுடன் பல்வேறு விளையாட்டுகளில் பங்குபற்றியவர் பிஸ்டோரியஸ். 2003 ஆம் ஆண்டு ஓட்டப்போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், தற்போது அங்கவீனர்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் போட்டிகளில் உலக சாதனையாளர். 2004 ஆம் ஆண்டு அங்கவீனர்களுக்கான பராலிம் பிக் 100 மீற்றர், 200 மீற்றர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் சுவீகரித்தார்.
பிஸ்டோரியஸ் அவற்றுடன் திருப்தியடையவில்லை. பூரண உடற்தகுதி கொண்டோருடன் ஒலிம்பிக்கில் போட்டியிட வேண்டும் என்பது அவரின் இலட்சியம். ஆனால், சர்வதேச மெய்வன்மைச் சம்மேளனங்களின் சங்கம் (ஐ.ஏ.ஏ.எவ்) சாதாரண போட்டிகளில் பங்குபற்றுவதற்கு கடந்த ஜனவரி மாதம் பிஸ்டோரியஸுக்குத் தடை விதித்தது.
பிஸ்டோரியஸ் பயன்படுத்தும் பாரம் குறைந்த செயற்கை இழைக் கால்கள் அவருக்கு விசேட அனுகூலத்தை அளிக்கிறது என்பது ஐ.ஏ.ஏ.எவ்.வின் வாதம்.
இதற்கு எதிராக சர்வதேச விளையாட்டுத் துறை பிணக்கு மத்தியஸ்த குழுவிடம் பிஸ்டோரியஸ் முறையீடு செய்தார். அண்மையில் பிஸ்டோரியஸுக்கு ஆதரவாக இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியது.
எனவே, தற்போது பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 400 மீற்றர் போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதிபெறும் தீவிர முயற்சியில் பிஸ்டோரியஸ் ஈடுபட்டுள்ளார்.
பல மாதங்களை வழக்கு விவகாரத்தில் கழித்த நிலையில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கு கடினமான பயிற்சிகளில் பிஸ்டோரியஸ் ஈடுபட நேரிட்டுள்ளது. எனினும் அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
இப்பிரிவில் அவரின் சிறந்த நேரப்பெறுதி 46.33 விநாடிகளாகும். எனினும் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கு 45.55 விநாடிகளில் அவர் ஓடிமுடிக்கவேண்டும்.
இந்நிலையில் ஜூலை 2 (மிலான்), ஜூலை 16 (லுசேர்ன்), ஜூலை 16 (ரோம்) ஆம் திகதிகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பூரண உடற்தகுதி கொண்டோருடன் அவர் ஓடவுள்ளார். ஓட்டவீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கு ஜூலை இறுதி வரை அவகாசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.