நேபாள நாட்டின் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு வீரர் மகபூப் அலாம் (வயது 26) எதிர் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் பின் தங்கிய நாடுகளிடையே ஐ.சி.சி.டுபாயில் நடத்திவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்தான் மேற்படி சாதனை நிலைநாட்டப்பட்டது.
நேபாள கிரிக்கெட் அணிக்கும் மொசாம்பிக் கிரிக்கெட் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மொசாம்பிக் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பந்துவீச்சில் நேபாள அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சு வீரர் மகபூப் அலாம் 7.5 ஓவர்கள் பந்துவீசி எதிரணியினரின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவரது பந்துவீச்சில் 9 எதிரணி வீரர்கள் ஓட்டங்கள் ஏதும் எடுக்காது ஆட்டமிழந்துள்ளார்கள்.
50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இதுவே முதல் தடவை என்று ஐ.சி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளரான அனில் கும்பிளே ஒரு இனிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.