Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மாறியது ஆட்டம் மாற்றியது யாரோ?
[01 - June - 2008] [Font Size - A - A - A]
கிரிக்கெட்டின் முகம் மாறிவிட்டது. ஐந்து நாட்கள் நின்று நிதானமாக ஆடும் டெஸ்ட் ஆட்டம், கொஞ்சம் வேகம், கொஞ்சம் விவேகம் என்று கலந்துகட்டி ஆடும் ஒருநாள் போட்டிக்கான செல்வாக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.

அடிஅடியென, இடிஇடியென அடிக்கும் மட்டையாளர்களுக்கும், விக்கெட்டுகளை எகிறிவிடும் பந்துவீச்சாளர்களுக்கும் தான் இன்றைக்கு மதிப்பு. "ருவென்ரி 20' இல் எல்லாமே அதிரடி வேகம்தான். இங்கு யாரும் நொண்டியடிக்க முடியாது.

விளம்பரதாரர்கள், பார்வையாளர்கள் என்ற அளவிலேயே நின்ற நிறுவன முதலாளிகளும், நடிகர்களும் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக, விளம்பரத் தூதர்களாக மைதானத்துக்குள் வந்துவிட்டனர்.

என்றைக்கு வர்த்தக மகாராஜாக்கள் கிரிக்கெட்டுக்குள் வந்தார்களோ, அப்போதே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் மெகா தொழில் என்றாகிவிட்டது.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் சோபிக்காவிட்டால் தேர்வாளர்தான் கவலைப்படுவார்கள். இன்று "ருவென்ரி 20'யிலோ ஒரு வீரர் சொதப்பினால் அந்த அணியின் உரிமையாளருக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது.

பிரம்மாண்டமான முதலீடு, விலாவாரியான விளம்பர உத்திகள், "சியர் லீடர்ஸ்' மாதிரியான "ஜிகினா' வேலைச் செலவு, உலகளவிலான கவனம், சர்வதேச ரி.வி ஒளிபரப்பு என்ற ஐ.பி.எல்.லின் அதீதமான பின்னணியில், ஒரு அணி சந்திக்கும் தோல்விகள் சில சலசலப்புக்களையும் விரும்பத்தகாத சூழலையும் ஏற்படுத்துவது இயல்பே.

"பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்' உரிமையாளரான மதுபான சக்கரவர்த்தி விஜய் மல்லையாவின் வார்த்தைகளிலிருந்து அதை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம்.

""நான் கிரிக்கெட்டை அதிகம் விரும்பிப் பார்ப்பவன் என்றபோதும், அதில் நிபுணன் கிடையாது. ஆனாலும் அதிரடியாக விளையாடும்திறன் படைத்த சிலரை அணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் டிராவிட்டின் "ஐடியா' வேறு மாதிரி இருந்தது. அவர் ஒரு முக்கியமான வீரர் என்பதாலும், அணியின் தலைமை நிர்வாகி சாரு சர்மா அவருக்கு ஆதரவாக இருந்ததாலும் அவர்கள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால் அணி பட்டியலைப் பார்த்த எனது நண்பர்கள், "இது டெஸ்ட் அணி போல் இருக்கிறது' என்றார்கள். அதன் பிரதிபலிப்பு இன்று தெரிகிறது. என்ன செய்வது, "துரதிர்ஷ்டவசமாக' மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டிலும் கப்டன்தான் "பாஸ்' என்ற நிலைமை இருக்கிறது. எங்கள் அணி புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருப்பதை நான் மட்டுமல்ல, டிராவிட்டும் விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்...' என்று பொருமித் தீர்த்துவிட்டார்.

இதன் தொடர்விளைவாக சாரு சர்மா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு டிராவிட் தனக்கே உரிய பாணியில் "கட்டை' போட்டார். ஐ.பி.எல்.லில் மும்பை இன்டியன்ஸுக்குப் பிறகு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அணி பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ். இதிலும் பல சர்வதேச நட்சத்திரங்கள் இருந்தும் சோபிக்காமல் போனதுதான் ஆச்சரியமான வருத்தம். "பாலைவனச் சோலையாய்' ஒன்றிரண்டு போட்டிகளில் டிராவிட் அசத்தியும் அணி கரை சேரவில்லை.

சிரேஷ்ட வீரர்கள் பலர் டிராவிட்டுக்கு ஆதரவாக இருந்தபோதும், "முதல் போடும் முதலாளிக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது' என்றும் கொக்கி போடுகிறார்கள்.

ஐ.பி.எல்.லில் நட்சத்திரங்கள் பலர் இருந்தும் சறுக்கிய மற்றொரு அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த இரண்டு அணிகளின் வீழ்ச்சி உணர்த்தும் உண்மை, அணியின் வெற்றிக்கு பெரிய பெயர்களோ, சுப்பர் ஸ்டார்களோ மட்டுமே உத்தரவாதம் கொடுத்து விட முடியாது. உதாரணமாக, "பளிச்'சென்ற "பெரும்புள்ளிகளோ', தனியாகப் பயிற்சியாளரோ இல்லாத, ஐ.பி.எல். அணிகளிலேயே குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட "ராஜஸ்தான் ரோயல்ஸ்' சக்கைபோடு போடுகிறது.

ஆனால் ஐதராபாத் அணி தடுமாறினாலும், அதன் வீரர்களுக்கு உரிமையாளர் தரப்பிலிருந்து வெளிப்படையான நெருக்கடி ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

"எங்கள் அணியின் கடினமான நேரங்களில் எல்லாம் எங்கள் உரிமையாளர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்...' என்று நிர்வாகத் தரப்புக்கு புகழ்மாலை சூட்டுகிறார், காயத்தால் விலகியிருக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் கப்டன் வி.வி.எஸ்.லட்சுமண்.

ஆனால் எந்த அணி உரிமையாளரும் தோல்வியை சகித்துக் கொள்ளமாட்டார், ரசிக்கமாட்டார் என்பதே உண்மை. வர்த்தக உலகின் அத்தனை அம்சங்களும் கிரிக்கெட்டிலும் அம்சமாகப் பொருந்திவிட்ட நிலையில், தொழில் உலகின் தீவிர போட்டி இங்கேயும் இருக்கத்தானே செய்யும்?

ஆக, களத்தில் நிற்கும் வீரருக்கு எக்கச்சக்க நெருக்கடி. வீரர்களுக்கு கோடி கோடியாய் கொடுக்கப்படும் "கூலி' பற்றித்தான் சாதாரண மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல தொன் அழுத்தத்தை விளக்கொளியில் விளையாடும் வீரர்களே உணர்வார்கள். இதற்கெல்லாம் ஈடுகொடுக்கக்கூடிய வீரர்களால்தான் இன்றைய "ருவென்ரி 20' யுகத்தில் தாக்குப்பிடிக்கவும் முடியும்!

Email this page Your Opinion Print this page
தெற்காசிய உதைபந்தாட்டப் போட்டிகள் 3 ஆம் திகதி மாலைதீவிலும் 4 ஆம் திகதி இலங்கையிலும் நடைபெறும்
மாறியது ஆட்டம் மாற்றியது யாரோ?
நேபாள கிரிக்கெட் வீரரின் பந்துவீச்சு சாதனை
ஊனமுற்றவர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றலாம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com