Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
மறுபக்கம்
 
மறுபக்கம்
கோகர்ணன்

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் இலங்கை தனது உறுப்புரிமையை இழந்துள்ளமையைப் பற்றி அரசாங்கத் தரப்பிலிருந்து கடுமையான சீற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த உறுப்புரிமைக்கான தெரிவிற்கு முன்னம் கூறப்பட்ட நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடின் அரசாங்கத்தில் உள்ளவர்கள் சர்வதேச அரங்கில் தமது செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்று அறியாதவர்களாகவே உள்ளனர் என்று விளங்கும்.

மனித உரிமைக் குழுவிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எத்தனை நாடுகளின் ஆட்சியாளர்கள் அப்படிப்பட்ட ஒரு குழுவில் இடம்பெறத் தகுதியுடையோர் என்று கவனித்தால் மனித உரிமை என்பது இன்னுமொரு சர்வதேச அரசியல் நாடகம் என்று விளங்கும். எனினும், அதை அசட்டை செய்வது சிலருக்கு ஆபத்தானது. வேறு சிலருக்கு எவ்விதமான பாதிப்பும் அற்றது. எனினும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இல்லை என்றும் இருப்பதாகக் கூறுவோர் கெட்டநோக்கமுடையோர் என்றும் இலங்கை அரசாங்கம் பிடிவாதமாகக் கூறி வந்துள்ளது. அது மட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை மறுக்கும்போது பயன்படுத்தப்படுகிற மொழி மூர்க்கத்தனமானதாக இருக்கக் காணப்பட்டுள்ளது. இது லக்ஷ்மன் கதிர்காமர் காலத்து நடத்தைக்கு எதிர்மாறானது.

அன்றும் மனித உரிமை மீறல்கள் நடந்தன. பலர் காணாமலாக்கப்பட்டனர். அமைதி பற்றிப் பேசிக் கொண்டு கொடிய போர் நடத்தப்பட்டது. இலங்கை அரசாங்கத்தை அந்நிய அரசாங்கங்கள் சிலவேனும் விமர்சித்தன. அதேவேளை, விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது. இலங்கை அரசாங்கத்தின் குற்றங்களை அது பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் கதிர்காமரின் சாதனைகளல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுதலைப் புலிகளை அடக்குவதாக முடிவு எடுத்த காரணங்கள் இலங்கை அரசின் நலன் பற்றியன அல்ல. கதிர்காமர் சொற்கேட்டு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அமெரிக்கத் தகவல் நிறுவனங்கள் ஒன்றுங் கையாலாகாதனவுமல்ல. எனினும், நலிந்து பகை தேடாதளவுக்கு அயல் உறவுகளில் நிதானம் இல்லாதிருந்தால் இலங்கை அரசாங்கத்திற்குப் பாதகமான முறையிலும் சில முடிவுகள் அமைந்திருக்கலாம். கதிர்காமராலேயே காரியம் நடந்தது என நம்புவது கதிர்காமருக்கு வசதியாயிருந்தது. அவரைத் தன் வசம் வைத்திருந்த இலங்கை அரசாங்கத்திற்கும் வசதியாக இருந்தது. அது பற்றிப் பேசாமலிருப்பது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வசதியாயிருந்தது. பொதுவாகவே அயல் உறவுகளைக் கையாள்வதற்குப் பயிற்றப்பட்ட இராசதந்திரிகள் தேவை. எல்லா நாடுகளிலும் பயிற்றப்பட்டவர்களே தூதரகங்களில் முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். இலங்கையிலும் இதுவே வழக்கமாக இருந்தது. அது வெகுகாலம் முன்பு அரசியல் தொடர்புகள் கட்சி அனுதாபிகள், நண்பர்கள், உறவினர்கள் என்பனவெல்லாம் மெல்ல மெல்ல முக்கியமான தகுதிகளாயின. தேர்தலிற் தோற்ற ஆளுங்கட்சி வேட்பாளர்கள் முதல் முன்னாட் படைத் தளபதிகள் வரை பலரும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று அயல் நாடுகளில் உள்ள தூதரகங்கள் செய்கிற முக்கியமான பணி இங்கே வேலையின்மைக்கு ஒரு சிறிய நிவாரணம் வழங்கல் என்றே கூற வேண்டும்.

மிகவும் கடுமையான எதிர்ப்பையும் பண்பட்ட முறையில் வெளிப்படுத்துவது அயல் உறவுகளில் முக்கியமானது. இது இராசதந்திரிகட்கான சில மொழிப் பிரயோகங்கள் இருந்து வருகின்றன. வழமையான வாசிப்பில் சாடையான கருத்து வேறுபாடே போன்று தோன்றினாலும் அது கடுமையான எதிர்ப்பைக் குறிக்க இயலும். இரண்டு நாடுகள் தம்மிடையே போரில் இறங்கியுள்ள போதும் நாடுகளின் இராசதந்திரிகள் மிகவும் பண்பான முறையிலேயே கருத்துப் பரிமாறுவதையும் காணலாம். இவை எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சில இராசதந்திரிகள் மிகவும் திமிருடனும் முரட்டுத்தனமாகவும் பேசுவதுமட்டுமன்றித் தாம் அதிதிகளாகத் தங்கியுள்ளநாடுகளின் மக்களையும் அரச அலுவலர்களையும் சில சமயம் அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் எடுத்தெறிந்து பேசுவார்கள். இலங்கையில் இருந்த சில இந்தியத் தூதுவர்களை இவ்விடத்து நினைவுகூராமல் இருக்க இயலவில்லை. அமெரிக்கத் தூதுவர்கள் சிலரும் அத்துமீறிப் பேசியுள்ளனர் என்றாலும் தூதனாகப் போய் நாட்டுக்குத் தீவைத்துக் கொளுத்திய இராசதந்திர மரபுடைய நாடு என்ற வகையில், இந்தியா சிறப்பான தூதர்களை உலகிற்குத் தந்துள்ளது.

என்றாலும், இலங்கையின் இராசதந்திரம் எதற்குஞ் சளைத்ததல்ல. இங்கே யார் வேண்டுமானாலும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக யாரையும் திட்டலாம். உண்மைகளோ ஆதாரபூர்வமான தகவல்களோ இல்லாமல் எல்லாக் கேள்விகட்கும் விடைகூறக்கூடிய நிபுணத்துவம் இங்கே போதியளவில் உள்ளது. அந்நிய மூலதனத்துக்கும் கேடில்லாமல் திறந்த பொருளாதாரக் கொள்கையை மாற்றாமல் உள்ள வரை, இங்கே யார் ஆண்டாலும் அமெரிக்காவுக்கு அக்கறையில்லை. அது தெரியாதவர்கள் தான் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் காரணமாக மேலை நாடுகள் ஏதாவது செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நிச்சயமாக மேலை நாடுகள் இலங்கையின் பொருளாதாரம் பற்றித் திருப்தியுடன் இல்லை. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்குத் தேவையான ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. மனிதாபிமானத்தின் பேரால் பணம் வருகிறது. அந்நிய ஆட்சியாளர்கள் கடன் வழங்காவிட்டால், தனியார் வங்கிகள் வழங்குகின்றன. இலங்கைக்கு இந்து மாகடலில் அதன் அமைவிடம் காரணமாக ஒரு கேந்திர முக்கியத்துவம் உண்டு. அதுவே இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்புக்குக் காரணமாக இருந்தது. இன்று அந்த முக்கியத்துவம் முன்னைய கொலனிய யுகத்தின் வணிக முக்கியத்துவத்தினும் மேலாகத் தென்னாசியா மீதான மேலாதிக்க நோக்கங்கள் சார்ந்து அமைகிறது. நிச்சயமாக இலங்கையின் கடல் வளமும் மண் வளமும் முக்கியமானவை. எனினும், அமெரிக்க இந்திய அக்கறைகளில் பிராந்திய மேலாதிக்கத்தின் பங்கு பெரியது.

இலங்கை அரசாங்கத்தை வெளிவெளியாக மிரட்டிப் பணிய வைப்பது நாட்டினுள் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மேலாதிக்கவாதிகள் அறிவர். இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு பேச்சாளர்களது திமிர்த்தனமானதும் அவமதிக்கும் முறையிலானதுமான உரைகள் உள்ளூர் நுகர்வுகளை என்று அவர்கள் அறிவார்கள். முக்கியமான பேரங்கள் எல்லாம் திரைமறைவிலேயே நடக்கின்றன. சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டுகிற விதமாக ஈரானுடனான புதிய நெருக்கம் அமைந்தாலும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பினவுக்கு அது போதுமானதல்ல. எனினும், அமெரிக்கா தனது எரிச்சலை வெளிப்படுத்துகிற விதமாகச் சில காரியங்களைச் செய்யும். அவற்றாற் பெரிய பாதிப்பு எதுவும் இராது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தைத் தண்டிக்க நினைத்தால் அது எடுக்கிற நடவடிக்கைகள் லத்தீன் அமெரிக்காவின் உண்மையான ஜனநாயக நாடுகட்கு எதிராக அது எடுத்துள்ள நடவடிக்கைகள் மாதிரியாவது அமையும்.

இலங்கை அரசாங்கம் தன்னைத்தானே பலவிதமான நெருக்கடிகட்குள் ஆழ்த்தி வருகிறது. அதன் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்பதே எனது மதிப்பீடு. எனினும், அது எவ்வகையான வீழ்ச்சியாயிருக்கும் என்பது பற்றியே எனது கவலை. இப்போது எந்தவொரு பாராளுமன்ற அரசியற் கட்சியையும் மக்கள் நம்பவில்லை. ஆனாலும், மக்களுக்கு முன்னால் எவ்வகையான தெரிவுகள் உள்ளன?

பாராளுமன்றத்துக்கு வெளியே இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று மக்கள் அரசியல் மூலம் ஏற்படக்கூடிய ஒரு அடிப்படையான சமூக மாற்றம். மற்றது இராணுவ ஆட்சி. இப்போதுள்ள ஆட்சியிலிருந்து சிறிய ஒரு நகர்வு மட்டுமே ஒரு இராணுவ ஆட்சி ஏற்படப்போதுமானது என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சி ஜனநாயக மறுப்பை முன்னெடுத்துவருகிறது.

மனித உரிமையின் பேரால் ஒரு இராணுவச் சர்வாதிகாரம் இயலுமானது. இலங்கைக்கு உறுதியான ஒரு அரசாங்கம் தேவை என்பதும் அதற்குச் சாதகமானது. இன்றைய ஆட்சியாளர்கள் ஜனநாயக உரிமைகளை எல்லாம் பறித்த பின்னால் எந்த ஆட்சியும் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்களேயானால், மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்களது ஊழல் காரணமாக அரசியல்வாதிகள் பற்றி நம்பிக்கையற்றுப் போவார்களேயானால், ஒரு இராணுவ ஆட்சிக்கு அதிகம் எதிர்ப்பு இல்லாமற் போகலாம். நிலைபெற்ற ஒரு இராணுவ ஆட்சிக்கு அந்நிய ஆதரவு எளிதாகவே கிடைக்கலாம்.

ஒரு சனநாயக ஆட்சி எவ்வளவு குறைபாடானதாக இருந்தாலும் அதனிடத்தில் ஒரு இராணுவ ஆட்சி வருவது மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தான், மியன்மார் (பர்மா), பங்களாதேஷ் ஆகிய நாடுகளினது அனுபவங்களிலிருந்து தாம் கற்க வேண்டிய முக்கியமான பாடம், இராணுவ ஆட்சி ஒன்று வருவதற்கு இடமளித்தால் அதைப் போகச் செய்வது மிகவும் கடினம்.

இலங்கை அரசாங்கம் தனது தேசிய அரசியலில் மட்டுமன்றித் தனது சர்வதேச அரசியல் உறவுகளிலும் நடந்துகொள்ளுகிற விதம் அந்நியக் குறுக்கீட்டுக்கு வழி செய்யலாம். எவ்விதமான குறுக்கீடாயினும், குறுக்கீட்டுக்காகக் காட்டுகிற காரணமும் குறுக்கீட்டின் நோக்கமும் ஒன்றல்ல.

இந்த அரசாங்கத்திற்கு ஒரு திசையுமில்லை. இந்த காட்டுக்கான புதிய திசையைக் காட்டுவோர் மக்களா? வேறுயாருமா?

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com