Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்!
சா.ஆ.தருமரத்தினம்

(தொடர்ச்சி)

சொந்த அச்சகம் அழிக்கப்பட்ட நிலையிலும் கூட மூன்று , நான்கு நாட்களுக்குள் மாற்று ஏற்பாட்டால் மீண்டும் வெளிவரத் தொடங்கிய "ஈழநாடு' யாழ்.குடாநாட்டு மக்களுக்கு மட்டும் அத்தகவலைச் செய்தியாகத் தரத்தவறவில்லை. ஆயினும், தென்னிலங்கைக்கோ அயல்நாடுகளுக்கோ அந்தப் பண்பாட்டுப் படுகொலை அதன்மேல்தான் அறிவிக்கப்பட வேண்டியதாகவிருந்தது.

சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை பா.உ. உடன் கூட்டாக மனிதவுரிமை மீறுதல்கள் தொடர்பில் கருத்தாக நடவடிக்கை எடுத்து வந்த சட்டத்தரணி எஸ்.சேவியரிடம் கட்டுரையாளர் அது குறித்து முறையிட்டார். ""இன்று பிற்பகல் 5 மணிக்கு முன் யாழ். பொதுநூலகத்தின் எரியுண்ட தோற்றங்களைக் காண்பிக்கும் ஒளிப்படங்களைத் தருவாயாகில் அதனை உலகச் செய்தியாக மாற்றித் தருகிறேனோ, இல்லையோ பார்' எனச் சட்டத்தரணி சேவியர் சவால்விடுத்ததுடன் ஒளிப்படங்களுக்கான செலவையும் தாமே தருவதற்கும் உடன்பட்டார். அக்குறுகிய கால அவகாசத்தினுள் புதிதாகப் படம்பிடித்து நிறைவேற்றக்கூடிய காரியமாக அது இருந்திருக்கவில்லை. அதுவும் காவல்துறையினர் கண்களில்படாது நிறைவேற்றப்பட வேண்டிய செயலாகவும் அது இருந்தது. எனவே, மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்தை அணுகிய கட்டுரையாளர் விடயத்தை எடுத்துரைத்தார். புதிதாகப் படங்களைப் பதிவதற்கு தொலைபேசி மூலம் ஏற்கனவே, அவற்றைச் சமர்ப்பித்திருந்த புகைப்படம் எடுப்பவருக்கு உடனடியாகக் கட்டளை பிறப்பித்த மாநகர ஆணையாளர், நட்டஈடு கோரும் உத்தியோக தேவைகளுக்காகப் பெறப்பட்டிருந்த ஒளிப்படங்களைக் கொண்ட புத்தகங்கள் இரண்டினையும் கட்டுரையாளரிடம் கையளித்தார்.

சட்டத்தரணி சேவியர் இவ்வாறு தாம் பெற்றுக்கொண்ட யாழ். பொதுநூலகத்தின் ஒளிப்படங்களை தொடர் வண்டியில் அன்றுமாலையே தலைநகருக்குப் புறப்பட்ட ஒருவர் மூலம், விமானம் மூலம் மறுநாள் சென்னைக்குப் புறப்பட்ட இளம் சட்டத்தரணி சந்திரகாசனுக்கு கட்டுநாயக்கா சுங்கப் பரிசோதனைப் பீடத்தை விமானநிலையத்தில் அவர் கடந்த பின் கையளிக்கப்படும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

சந்திரகாசன் தாம் உடன் எடுத்து வந்திருந்த யாழ். பொது நூலகத்தின் எரிந்த தோற்றங்களைக் காண்பிக்கும் ஒளிப்படங்களை சென்னையில் வைத்து மறவன்புலசச்சியிடம் தர இருவரும் கூட்டாக அழைத்திருந்த சர்வதேச பத்திரிகையாளர் மத்தியில் அவற்றை முன் வைத்து போதிய தகவல்களையும் தந்திருந்தனர். மறுநாடிலே யாழ். பொது நூலகத்துக்கு நேரிட்ட மனுக்குலத்துக்கே விரோதமான குற்றச்செயலான அப்பண்பாட்டுப் படுகொலை உலகச் செய்தியாக வியாபித்துவிட்டது. அது முதல் இன்று வரை யாழ். பொதுநூலகத்துக்கு நிகழ்த்தப்பட்ட பேரழிவினைப் பிரஸ்தாபித்திருக்காத செய்தி ஊடகங்களோ சஞ்சிகைகளோ, உலகில் எதுவுமே கிடையாது என்பது தெரிந்ததே.

தோழர் பீட்டர் கெனமன் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கள நாளேடான "அந்த' பத்திரிகையின் படப்பிடிப்பாளர் சகிதம் அதன் மேல் யாழ்ப்பாணத்துக்கு விரைந்ததையடுத்தே மேற்படி பேரழிவும் ஏனைய அனர்த்தங்களும் தமிழ் பெரியார்கள் ஞாபகமாக நிறுவப்பட்டிருந்த வள்ளுவர், ஒளவையார் மற்றும் சோமசுந்தர, பாரதியார் சிலைகள் அடித்து நொருக்கப்பட்டிருந்த காட்சிகளை சிங்களப் பத்திரிகைகள் ஒளிப்படங்கள் சகிதம் செய்திகளாக தென் இலங்கையில் வெளியிடத் தலைப்பட்டன. ஊர் வாயை உலை மூடியால் மூடும் எத்தனம் நெடுங்காலம் பலிக்காது என்பது இதன்மூலம் பட்டவர்த்தனமாக வெளியாயிற்று. தோழர் பீட்டர் கெனமன் தனது மரணத்தின் பின் தமது புத்தகச் சேர்வுகள் அனைத்தையும் மீள்வித்துப் புதுப்பிக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்துக்கே அர்ப்பணித்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதே!

இத்தனையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நிகழுமென எதிர்பார்க்கப்பட்ட யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி அரசு அதனது பாணியில், ஜனநாயக நடைமுறையில் எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னோடி நடவடிக்கைகளேயன்றி வேறல்ல. அமைச்சர் சிறில் மத்தியு தேர்தல் நடைபெற்ற தினத்தில் குருநாகல் தொகுதியில் இருந்து தாம் உடன் அழைத்து வந்திருந்த சிற்?ழியர்களால் தேர்தல் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருந்த அரச ஊழியர்கள் பதிலீடு செய்யப்பட்டனர்.

வாக்கு மோசடிகளுடன் வாக்குப் பெட்டிகளில் கள்ள வாக்குகள் கத்தை கத்தையாகவே திணிக்கப்பட்டன. உரிய இடங்களில் இருந்து வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய வாக்குப் பெட்டிகள் அமைச்சர்கள் தங்கியிருந்த சுபாஸ் விருந்தினர் விடுதி போன்ற இடங்களுக்கும் கொண்டு போகப்பட்டன. அங்கும் கள்ள வாக்குகள் வகை தொகையின்றித் திணிக்கப்பட்டன. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பெட்டிகளில் ஆறு பெட்டிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதே கணக்குக்குக் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்தின் பயறு சமீபத்தில் நிகழ்ந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் அவிந்திருக்கலாம். ஆயின், அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட தில்லுமுல்லு மோசடிகளோ அவற்றை எதிர்த்து வெகுண்டெழுந்த யாழ். குடாநாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மண்ணில் அவர்கள் பயறு வேகாது என்பது ஒரு பாடமாகவே புகட்டப்பட்டிருந்தது.

மக்கள் ஆணையை மீறியவர்களாக மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட முற்பட்டவர்களை எதிர்ப்பதற்காக அத்தேர்தலையே முற்றுமுழுதாக புறக்கணிப்பதற்குத் தீர்மானித்திருந்த வாக்காளர் திடீரென்று அந்த முடிவைத் தலைகீழாக மாற்றிக்கொள்ள மேற்படி தேர்தல் மோசடிகள் நிர்ப்பந்தித்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுடன் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யாவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் கூட்டாக தேர்தலில் இருந்து விலகிவிட்டதாகவே ஒரு வதந்தி யாழ். குடா நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவ விடப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஒரு சிலரையேனும் வெல்ல வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் மோசடி இவ்வாறே தோற்கடிக்கப்பட்டது.

ஆறு வாக்குப் பெட்டிகள் காணப்படாத நிலையில் வாக்குகளைக் கணிப்பீடு செய்வதற்கும் தேர்தல் பெறுபேறுகளை அறிவிப்பதற்கும் தேர்தல் அதிகாரியாகக் கடமையாற்றிய யாழ். அரசாங்க முகவர் யோகேந்திரா துரைச்சாமி மறுத்துவிட்டார். அவரை மசிய வைப்பதற்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் தயவை நாடிற்று. யாழ். மாவட்ட அபிவிருத்தி சபை ஆசனங்கள் அனைத்தையும் கூட்டுமொத்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணியே வெற்றி பெற்றமையே தேர்தல் பெறுபேறாயிற்று.

1981 நெருக்கடி நிலை விவாதத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரன் உடுப்பதற்கு மாற்று உடைதானும் இல்லாத ஒருவராக இரவல் பெறப்பட்ட தமது தந்தையாரின் உடையிலேயே தாம் பிரசன்னம் தந்திருப்பதாக உரைத்திருந்தார். ஆளும் கட்சி உறுப்பினர்களோ அன்று கத்தை கத்தையாக வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுக்கள் திணிக்கப்பட்டமையையும் தாம் நிகழ்த்திய ஏனைய மோசடிகளையும் முழுமையாகவே மறுத்திருந்தனர். மேற்படி மோசடிகளில் அன்று கதாநாயகனாக வர்ணிக்கப்பட்ட அமைச்சர் காமினி திசாநாயக்காவின் மைந்தர் நவீன் திசாநாயக்காவோ இன்று பகிரங்கமாகவே அதனைப் பறைசாற்றியுள்ளார். காரணம் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஆளும் தரப்பிற்கு கரணமடித்திருந்ததல்.

யாழ். பொதுநூலகப் பேரழிவினை நிகழ்த்தியவர்கள் யார் என்பதைத் தாம் முன்னறிவித்தல் கொடுத்திருக்கும் அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்படும்போது அம்பலப்படுத்தப்போவதாக எதிர்க் கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் சபையில் சவால் விடுத்திருந்தார். நெருக்கடி நிலை விவாதத்தின்போது ஆயினும் அது கைகூடவேயில்லை. காரணம் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பெறுபேறுகளை ஆட்சேபித்து சட்டத்தரணி இராஜஇராஜேஸ்வரன் நீதிமன்றில் தொடுத்திருந்த தேர்தல் ஆட்சேபனை வழக்கின் குறுக்கீட்டினால்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.வின் அங்கீகாரமும் சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளும்
ச.வி.கிருபாகரன்

(தொடர்ச்சி)

ஈழத்திற்கான சர்வதேச அங்கீகாரம்

மேலே கொடுக்கப்பட்ட சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகள் சுதந்திரம் பெற்ற நாடுகள் அத்துடன், சில ஐ.நா. அங்கத்துவ நாடுகளையும் ஒப்பிடும் பொழுது இலங்கைத் தீவில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையில் உள்ள "தமிழ் ஈழம்' பல விடயங்களிலும் மிகவும் மேலோங்கி நிற்பதை யாவரும் காணக் கூடியதாகவுள்ளது.

நீண்ட சரித்திரம், தனியான மொழி, கலசாரம், எல்லைகள் சரியாக நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு அத்துடன், சட்ட ஒழுங்கை காப்பதற்கான கட்டமைப்பு, சமூக பொருளாதாரம், கல்வி, நலம் காக்கும் கட்டமைப்புகளுடன் கூடிய நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்கான தரை, கடல், ஆகாயப் படைகள் போன்றவற்றை "தமிழ் ஈழம்' கொண்டுள்ளது. முன்பு இலங்கையில் சகலராலும் பேசப்படும் விடயம் என்னவெனில் இலங்கையில் 1960 ஆம் ஆண்டளவில் விமானம் இல்லாமல் விமானப்படை இருந்ததாம்.

தற்பொழுது "தமிழ் ஈழத்திற்கு' உள்ள குறை இரண்டாகவே இருக்க முடியும். ஒன்று அங்கீகாரம். மற்றையது சொந்த நாணயம். தமிழ் ஈழம் தமக்கான வங்கி, பொருளாதார கட்டமைப்புகளை கொண்டுள்ள போதிலும் இங்கு இலங்கையின் நாணயமே பாவனையில் இருந்து வருகிறது. ஆகையால் கூடிய விரைவில் தமிழ் ஈழத்திற்கான சொந்த நாணயம் உருவாகுவது வரவேற்கக் கூடிய விடயம்.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com