* பாராளுமன்றத்துக்கு தன்னை வரவிடாமல் தடுத்ததாகவும் விசனம்
பாராளுமன்ற சம்பிரதாயங்களின்படி இன்றைய தினம் ஜனாதிபதி பராளுமன்றத்துக்கு வந்து சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்நாட்டின் அரச தலைவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் . இது கேவலமானதொரு விடயம். மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு துணிச்சலற்ற ஜனாதிபதியாக இன்று மஹிந்த ராஜபக்ஷ மாறிவிட்டாரென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளனர்.
பாராளுமன்றம் நேற்றுக்காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பின்னர் சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது;
இன்று காலை நான் பாராளுமன்றத்துக்கு வந்தபோது பாராளுமன்ற நுழைவாயிலில் சிலர் கூடிநின்று எனது வருகையை தடுக்கமுயன்றனர். வாகனங்களை குறுக்கே நிறுத்தி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இது தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இறுதியில் நான் பாராளுமன்றத்துக்கு வேறு வழியிலேயே வந்தேன். இது ஒரு ஜனநாயக நாடு. பாராளுமன்றத்துக்கு வருவதற்கும் செல்வதற்கும் எமக்கு உரிமையுண்டு. இங்குள்ள சில அரசதரப்பு உறுப்பினர்களும் அந்த கூட்டத்தில் இருந்ததை கண்டேன்.
இன்று சபை நடவடிக்கையை ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருவாரென நாம் எதிர்பார்த்தோம். அவருடன் சில விடயங்களை விவாதிக்க தயாராகவிருந்தோம். ஆனால் பாராளுமன்றம் வருவதற்கு ஜனாதிபதி அச்சப்படுகின்றார்.
ஏனெனில் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றன. இந்நிலைமைகளினால் அவர் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மையும் பாராளுமன்றத்தையும் சந்திக்க அச்சப்படுகின்றார்.
ஜனாதிபதி ஒரு துணிச்சலற்றவர். அதனால்தான் இன்று சபைக்கு வருவதை தவிர்த்து வெளிநாட்டுக்கு சென்று ஒளிந்துள்ளார். இது ஒரு கேவலமான விடயம்.
சபாநாயகர் பதில்
ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் பதிலளித்த சபாநாயகர், பாராளுமன்றத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வருவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்புரிமை மீறல் சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுவிடமும் இப்பிரச்சினையை கொண்டு சென்றுள்ளேன்.
பாராளுமன்றத்துக்கு வருவதை தடுக்கும் செயல் மிகவும் பாரதூரமான சிறப்புரிமை மீறல் பிரச்சினை என்பதை நான் இச்சபைக்கு தெரியப்படுத்துகிறேன்.