* வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடுமாறு உத்தரவு
மட்டக்களப்பில் காத்தான்குடியை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடியில் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதியில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களால் அங்கு இயல்புநிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன வன்முறைகளைத் தடுத்து சுமுகநிலையை தோற்றுவிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் நிலைமை மோசமடைந்தே வருகிறது.வன்முறைச் சம்பவங்களாலும் வதந்திகள் பரவுவதாலும் பதற்றம் அதிகரித்து மேலும் மேலும் வன்முறைகள் அதிகரிக்கும் சூழ்நிலை தோன்றிவருவது குறித்து இரு சமூகப் பெரியார்களும் கவலையடைந்துள்ளனர்.
வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களையடுத்து கடந்த மூன்று நாட்களாக காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதால் அந்தப் பகுதி கடந்த மூன்று நாட்களாக முற்றாகச் செயலிழந்திருந்தது.
இந்தநிலையில் அங்கு சுமுக நிலையைத் தோற்றுவிக்க மத அமைப்புகளும் முஸ்லிம் பெரியார்களும் வர்த்தக சமூகங்களும் பொலிஸாரும் இணைந்து புதன்கிழமை மாலை முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதற்கமைய காத்தான்குடியில் நேற்றுக் கடைகள், வர்த்தக நிலையங்கள், அரச தனியார் அலுவலகங்கள், பாடசாலைகளென அனைத்தையும் திறந்து இயல்புநிலையை முழுமையாக உருவாக்க இணக்கம் காணப்பட்டு அதற்கேற்ப பள்ளிவாயல்கள் ஊடாக கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இதையடுத்து நேற்றுக்காலை அங்கு வழமைபோல் அனைத்தும் இயங்கின. கடைகள், அரச தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் திறக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் சுமுகமாக நடைபெற்றது.
இந்நிலையில், நேற்றுக்காலை 10.30 மணியளவில் காத்தான்குடிப் பகுதியிலிருந்து ஆரையம்பதி எல்லையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டதாகச் செய்தி பரவவே காத்தான்குடியில் பதற்றமேற்பட்டது.
திறக்கப்பட்ட கடைகள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் யாவும் உடனடியாக இழுத்து மூடப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கவே பெரும் பதற்றமேற்பட்டது.
இவ்வேளையில் வதந்திகள் பரவத் தொடங்கவே வன்முறை வெடித்தது. காத்தான்குடி பகுதியூடாகச் சென்ற வாகனங்கள் பலத்த தாக்குதல்களுக்கிலக்காகின.
விஷேட அதிரடிப் படையினர், இராணுவம், பொலிஸார் பெருமளவில் நின்றபோதும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ்கள், லொறிகள், சிறிய ரக வான்கள் தாக்குதல்களுக்கிலக்காகின. இவை அடித்து நொருக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சோடாப் போத்தல்களும், கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்புக்கு 7 நோயாளர்களுடன் பலத்த பாதுகாப்புடன் வந்த அம்புலன்ஸ் அடித்து நொருக்கப்பட்டு பலத்த சேதமாக்கப்பட்டது.
இதனால் அம்புலன்ஸ் சாரதி சம்சுதீன் (வயது 41), உதவியாளர் வி.மேகநாதன் (வயது 45), நோயாளிகளான எம்.ஐ.இப்ராஹிம் (வயது 70), எஸ்.இராஜதுரை (வயது 48) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு அலுவலகக் கடமைக்கு வந்த "டயலொக்' நிறுவன வான் நொருக்கப்பட்டதில் அதன் சாரதியான திலகரட்ண (வயது 40) மற்றும் மேற்பார்வையாளரான ஏ.சந்திரலிங்கம் (வயது 28) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காத்தான்குடியில் தொழில் நிமித்தமும் கடமைகளுக்காகவும் சென்றவர்களில் என். பாலசுந்தரம் (48, வயது, செல்வநகர், ஆரையம்பதி), விஜயகுமார் (50 வயது, 2 ஆம் குறுக்குத் தெரு, கல்லடி), குருகுலசிங்கம் ( 54 வயது, 2 ஆம் குறுக்குத் தெரு, கல்லடி), என். சுரேஷ் (24 வயது, மாவிலங்கை, ஆரையம்பதி), ரி.விஜயகுமார் (50 வயது, 3ஆம் குறுக்குத் தெரு, மாமாங்கம்), கே.சிவகுமார் (44 வயது, ஒப்பந்தக்காரர், மட்டக்களப்பு) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், தாக்குதல்களுக்கிலக்காகி காயமடைந்த நிலையில், ஆரையம்பதி ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை மிக மோசமடையவே அங்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டும் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டும் வன்முறைகளை தடுக்க படையினர் முனைந்தனர். மேலும், முற்பகல் 11.30 மணியளவில் காத்தான்குடிப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது, அதன்பின் நிலைமை சற்றுத் தணிந்தது.
மட்டக்களப்புக்கும் அம்பாறைக்குமிடையிலான போக்குவரத்துகள் வவுணதீவு கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ஊடாகவே நடைபெற்றன.
இந்தநிலையில், நேற்று நண்பகல் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அவசர கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் சமரக்கோன், வன்முறைகள் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்டதும் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கண்டதும் சுட உத்தரவு
வைத்திய சாலை ஊழியர்கள் மற்றும் அம்புலன்ஸ்களில் அனுப்பப்படும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்தே இந்த உயர் மட்டக்கலந்துரையாடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் சமரக்கோன், வைத்தியசாலை உயர் அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர் சங்கப்பிரதிநிதிகள், மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், பொலிஸ் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலிருந்து, களுவாஞ்சிக்குடி கல்முனை போன்ற பகுதிக்கும், கொழும்புக்கு செல்லும் அம்புலன்ஸ்களுக்கு பாதுகாப்பு இன்மையால் சாரதிகள், உதவியாளர்கள் மறுப்பதாகவும், மட்டக்களப்பின் சகல பகுதிகளிலுமிருந்து வந்த ஊழியர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
மேலும், அம்புலன்ஸ்களுக்கு தலா இரண்டு பொலிஸாரையும் இரண்டு மோட்டார் சைக்கிள் பொலிஸாரையும் பாதுகாப்பிற்கு அனுப்புவதாக தெரிவித்ததுடன், ஊழியர்கள் வீடுகளுக்கு திரும்ப இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்களை ஒழுங்குபடுத்தி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்வதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
அம்புலன்ஸ் சாரதிகள், பொலிஸாரின் உத்தரவாதத்தை ஏற்க முடியாது, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்தபோது தாக்கப்பட்டதாகவும் அதனால் பொலிஸாரை நம்பத் தயார் இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவைத் தான் தற்போது பிறப்பித்துள்ளேன். நீங்கள் பயமின்றி செல்லலாம். அவ்வாறு வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அம்புலன்ஸில் செல்லும் பொலிஸாரும் முன்னுக்கு பாதுகாப்பு வழங்கிச் செல்பவர்களும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுபவர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு உரிய உத்தரவினை வழங்குவதாகவும் தெரிவித்து கண்டவுடன் சுடும் உத்தரவினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிறப்பித்தார்.