டில்லி டேர்டெவில்ஸ் அணி "ருவென்ரி 20' போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து மற்றும் டுபாய் செல்ல திட்டமிட்டிருப்பதாக கப்டன் சேவாக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) "ருவென்ரி 20' தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கிண்ணத்தை வென்று சாதித்தது. இதையடுத்து, கப்டன் வோர்ன், ராஜஸ்தான் அணியை தனது சொந்த மாநிலமான, விக்டோரியாவில் விளையாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து டில்லி டேர்டெவில்ஸ் அணி, இங்கிலாந்து மற்றும் டுபாயில் "ருவென்ரி 20' போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதாக கப்டன் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில்;
""டுபாய் மற்றும் இங்கிலாந்தில் "ருவென்ரி 20' இல் ஆடும் திட்டம் உள்ளது. வீரர்கள் ஒற்றுமையுடன் விளையாடினர். மெக்ராத், வெட்டோரி போன்ற சிறந்த வீரர்களுக்கு தலைமை வகித்தது பெரிய கௌரவம். நூறு சதவீத சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினோம். "ருவென்ரி 20' டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளை பாதிக்குமெனக் கருதவில்லை. சர்வதேச அளவில் எதிரணியிலிருந்த வீரர்களுடன் ஓய்வு அறையைப் பகிர்ந்து கொண்டது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது' என்றார்.