பிரெஞ்ச் ஓப்பனில் ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் குறுகிய காலத்தில் "நம்பர் வன்' இடத்தை இழக்கிறார். அந்த இடத்தை பிடிக்க 3 வீராங்கனைகளிடையே போட்டி நிலவுகிறது.
பெண்கள் டெனிஸ் தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்திலிருந்து வந்த பெல்ஜியத்தின் ஜஸ்ரின் ஹெனின் கடந்த மாதம் திடீரென டெனிஸுக்கு முழுக்கு போட்டு விட்டார். இதையடுத்து 2 ஆவது இடத்திலிருந்த ரஷ்ய புயல் மரியா ஷரபோவா மீண்டும் முதலிடத்தை கைப்பற்றினார். ஆனால் அந்த இடத்தை அவரால் நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டியில் 4 ஆவது சுற்றிலேயே ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறியதால், பிரெஞ்ச் ஓப்பன் முடிந்ததும் அவரது "நம்பர் வன்' இடம் பறிபோகிறது.
இதையடுத்து அந்த இடத்துக்கு இனி புதிய வீராங்கனை வரவிருக்கிறார். அரியணையில் ஏற பிரெஞ்ச் ஓப்பனில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் செர்பிய வீராங்கனைகள் இவானோவிச் (தற்போது தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ளார்), ஜெலீனா ஜான்கோவிச் (3 ஆவது இடத்தில் உள்ளார்) மற்றும் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னட் சோவா (4 ஆவது இடம்) ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இவர்கள் 3 பேரில் ஒருவர் தான், திங்கட்கிழமை வெளியிடப்படும் புதிய தரவரிசையில் "நம்பர் வன் மங்கை' என்பது உறுதியாகி விட்டது. ஆனால் அது யார் என்ற "சஸ்பென்ஸ்' பெண்கள் இறுதிப்போட்டி நடக்கும் சனிக்கிழமை தெரிந்து விடும்.
இவர்கள் 3 பேரில் எவரேனும் ஒருவர் பட்டம் வென்றால் சந்தேகத்துக்கிடமின்றி நம்பர் வன் என்ற புதிய மைல்கல்லை எட்டி விடுவர். அதே சமயம் இவானோவிச் அல்லது ஜான்கோவிச் ஆகியோரில் ஒருவர் இறுதிபோட்டியில் குஸ்னட்சோவா அல்லாத ஒருவரிடம் தோற்றாலும் "நம்பர் வன்' இடத்துக்கு தகுதியானவர் தான்.
"நம்பர் வன்' குறித்து இவானோவிச்சிடம் கேட்ட போது, "தரவரிசையை பார்த்து ஆடக்கூடாது. நாம் நன்றாக ஆடி வெற்றி பெற்றால் தானாகவே "தரம் வந்து சேரும்' என்றார்.
ஜான்கோவிச் கூறுகையில், "உலகின் நம்பர் வன் இடத்தை பிடிக்க வேண்டுமென்பது எனது கனவு. அதனை இப்போது நெருங்கி விட்டேன். எனவே எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். என்னால் அதை செய்ய முடியுமென்று நம்புகிறேன்' என்றார்.
நேற்யை ஒரு அரையிறுதியில் இவானோவிச் ஜான்கோவிச் ஆகியோர் மோதினர். இவர்கள் இரண்டு பேரும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்த 6 போட்டிகளில் 5 இல் இவானோவிச் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.