போதைப்பொருள் வைத்திருந்ததாக டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிப் விடுவிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
அவர் 3 அல்லது 4 நாட்கள் அதிகாரிகளின் பிடியில்தான் இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தினால் அவர் பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், மொகமது ஆசிப்பிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனை முடிவுகளுக்காகவும் அவர் வைத்திருந்த போதைப்பொருள் பரிசோதனை அறிக்கைக்காகவும் டுபாய் அதிகாரிகள் காத்திருப்பதாக ஆசிப் விவகாரத்திற்காக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆசிப் மீதான புகார் விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் ஊடகச் செய்திகள் கூறிவந்தன. இந்த செய்திகள் தவறானவையென்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.