Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர்
[07 - June - 2008] [Font Size - A - A - A]
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவின் தொகுப்பான ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை தலைமை தாங்கினார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர் க. ஸ்ரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார். அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், இம்மாமன்றத்தின் பிரதித் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் அங்கத்தவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்காக சகல ஒழுங்குகளையும் செய்திருந்தனர். இவ்விழாவிலே வரவேற்புரையை மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் வழங்கினார். ஆசியுரைகளை பிரம்ம ஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா, பிரம்ம ஸ்ரீ.எஸ்.எஸ்.சந்திரசேகரக்குருக்கள் மற்றும் கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் வழங்கினர்.

இவ்விழாவிலே ஊடக ஆலோசகர் ஆ. சிவநேசச்செல்வன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் சி. தில்லைநடராஜா, பிரபல தொழில் அதிபர் எஸ்.பி.சாமி ஆகியோரும் வாழ்த்துரைகள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து நூல் அறிமுகவுரையை ""அருள் மொழியரசி' வசந்தா வைத்தியநாதனும் நூல் ஆய்வுரையை கலாநிதி குமாரசாமி, சோமசுந்தரமும், ஏற்புரையை விடைக் கொடிச் செல்வர், சின்னத்துரை தனபாலாவும் வழங்கினர்.

மேலும், நமது சமய மரபில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒரு கொடி உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியே கொடிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ன. இவ்வகையில் களத்தின் வடிவாய், வலிமையின் நிகழ்வாய், பண்பாட்டின் சின்னமாய், உழைப்பின் உறுதியாய் விளங்கும் விடைக்கொடியினை கொடிகாத்த குமரன் போன்று உலகம் முழுவதும் வாழும் நாடுகளில் எல்லாம், சைவர்கள் தங்கள் வீடுகளில், தாங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் திருக்கோயில்களில் சமய நிகழ்வுகளில் நந்திக் கொடியை பறக்க வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ""சிவநெறிச் செல்வன்' ""விடைக் கொடிச் செல்வர்' சின்னத்துரை தனபாலா (அகில இலங்கை சமாதான நீதிவான்) இரவு, பகல் என்று பாடுபடுவதை நாங்கள் உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இது மட்டுமின்றி தன் சொல், செயல், பொருள் யாவற்றாலும் நந்சிக் கொடிக்கு அவர் தம்மை அர்ப்பணித்திருப்பதை நாம் கண்டும், கேட்டும் உள்ளம் பூரிக்கின்றோம். விலைமதிப்பற்ற இவரின் மகத்தான பணி தொடரவேண்டும். உலகம் முழுவதும் இவரது பயணமும், பணியும் தொடர்ந்து ""பட்டொளி வீசிப் பறக்குது பார்' என மகாகவி பாரதி பாடி மகிழ்ந்த அந்த மகிழ்ச்சியை தனபாலா அவர்கள் பெறவேண்டும்.

இத்துடன் நமது சைவசமயக் கடவுள் சிவபெருமான். சிவபெருமானின் திருநாமம் நந்தி. ""நந்திநாமம் நமச்சிவாயவே' என்பார் திருஞான சம்பந்தர். நந்தி என்றால் வலிமை என்று பொருள். உழைப்பாளியின் தன்மை ""தர்மத்தின்' அடையாளம் என இறைவன் வாகன ரூடராக உமையுடன் உழைப்பையும், தர்மவானாகவும் கொண்ட எருதை (இடபத்தை) வாகனமாகவும், கொடியாகவும் கொண்டது பெருமையுடையதே, நந்தி இறைவனுக்கு வாகனமாகவும், கொடியாகவும், வாயிற்காப்பாளனாகவும், வாசகனாகவும் இருக்கும் பேறுபெற்றதால் சிறப்புடையதாகப் போற்றப்படுகின்றது.

நந்தியின் சிறப்பைப்பற்றி பத்தாம் திருமுறையாகிய திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. அதாவது நந்தியருளாலே மூலனை நாடியபின் நந்தியருளாலே சதாசிவன் ஆயினேன். நந்தியருளால் மெய்ஞ்ஞானத்தை நண்ணினேன் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சோழ மன்னர்கள் வேங்கையையும் சேரர்கள் வில்லையும் பாண்டியர்கள் கயலையும் தங்கள் கொடிகளாகக் கொண்ட பொழுது பல்லவ மன்னர்கள் சிவம்பெருக்கும் நந்திக்கொடியைத் தங்கள் நாட்டுக் கொடியாகக் கொண்டு மகிழ்ந்தனர். நந்தி என்ற சொல் முழுதுணர் ஞானம், வரம்பிலா ஆற்றல், மங்கலம், தூய்மை, செம்மை என்று பல பொருள் விளக்கங்களின் குறியீடாய் நீற்கும் பரம் பொருளாகிய சிவத்தையே குறிக்கும்.

நந்தி அறத்தின் வடிவம், தர்மத்தின் நிலைக்களம். ஆகவே, அறத்தின் வழியிலிருந்து அறவாழ்வு வாழும் சைவத் தமிழ் மக்கள் நந்தியைக் கொடியாகக் கொள்ள வேண்டும். மேலும், நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் என்ற நூலை விடைக் கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா தொகுத்து வழங்கியுள்ளமையை சைவ மக்கள் தமது பொக்கிஷமாகக் கொள்கின்றனர். உண்மையிலே தனபாலா பாராட்டப்பட வேண்டியவர். 400 பக்கங்கள் கொண்ட இவ் நந்திக்கொடி நூலில் ஏராளமான சுவையான செய்திகளைத் தொகுத்து தனபாலா வழங்கியுள்ளார். 40 க்கு மேற்பட்ட வண்ணப் படங்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலை மணிமேகலைப் பிரசுரத்தார் (சென்னை)மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். உண்மையிலேயே இவர்களை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.

இந்தியாவில் இந்நூலின் விலை ரூபா 175, இலங்கையில் ரூபா 500.

இத்துடன் மதுரையில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டில் ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் முதலில் வெளியிடப்பட்டது. இந்நூலை திருவண்ணாமலை ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள் (குன்றக்குடி) வெளியிட்டு வைத்தார். மேலும், கனடாவில் மணிமேகலைப் பிரசுர எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலண்டனில் லூசியம் சிவன் கோயில் மண்டபத்தில் 31.05.2008 இல் இந்நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபி மற்றும் டுபாயில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது. மேலும், இந்நூல் சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலானது வடபுலத்திலிருந்து தலைநகர் வந்து வர்த்தகத்தில், சமய, சமூக சேவையில் புகழ்பூத்த காந்தியவாதி, நாட்டின் இன, மத ஒற்றுமைக்கு உழைத்த ""சிந்தனைச் சிற்பச் செல்வர்' அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை (ஸ்தாபகர் லீலா நிறுவனங்கள்) அவர்கட்கும் மற்றும் சின்னத்துரை சௌபாக்கியம் அவர்கட்கும் சமர்ப்பணமாக வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளில் எங்கெல்லாம் சைவ விழாக்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நந்திக் கொடி கம்பீரமாகப் பறக்கின்றது. உண்மையிலேயே ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்னும் பெருமைமிக்க நூலை தொகுத்து வழங்கிய விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களின் தன்னலமற்ற பணியை நாம் பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும்.

மேலும், ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் உந்துசக்தியாகவும் விளங்குவது மனைவிமாரே. உண்மையிலேயே இத்தருணத்தில் ""விடைக் கொடிச் செல்வர்' தனபாலா அவர்கள் இந்நூலை மிகவும் சிறப்பாக வடிவமைப்பதற்கு அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கிய அவரின் துணைவியார் திருமதி கமலவேணி தனபாலா அவர்களை நாம் மனதாரப்பாராட்டுகின்றோம். அவரின் சேவை தொடர ஆண்டவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சக்தியையும் நல்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர்.

Email this page Your Opinion Print this page
யாவுமே வெற்றுத்தகர ஒலி எழுப்பல்கள் மட்டுமே
தமிழ் வழியில் உயர் கல்வி
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com