Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
யாவுமே வெற்றுத்தகர ஒலி எழுப்பல்கள் மட்டுமே
[07 - June - 2008] [Font Size - A - A - A]
காலகண்டன்

உலக உணவு நெருக்கடி உச்சநிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரிசி கோதுமை உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகள் நாளாந்தம் அதிகரித்தவண்ணம் உள்ளன. பெரும்பாலான நாடுகளில் மக்களது வாங்கும் சக்தி குறைவடைந்து செல்கின்றன. இதனால், வறுமையும் பட்டினியும் என்றுமில்லாதவாறு பரந்து விரிந்து செல்கிறது. உலகின் 22 நாடுகள் பட்டினியில் மக்கள் அதிகளவு இறந்து கொள்ளும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளை முழு உலகிலும் நூறு கோடி மக்கள் வறுமையாலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. வின் உலக உணவு விவசாய அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இத்தகைய உலக உணவு நெருக்கடி பொதுவானதாகச் சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் மூன்றாம் உலக நாடுகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நமது இலங்கையும் அதில் ஒன்றாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடிச் சூழலிலேயே கடந்த 3 ஆம், 4 ஆம், 5 ஆம் திகதிகளில் இத்தாலியின் தலைநகர் ரோமில் உலக உணவு விவசாய அமைப்பு ஒரு உச்சி மாநாட்டை நடாத்தியது. 151 நாடுகளின் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 44 நாடுகளின் தலைவர்களும் பங்கு கொண்டனர். இலங்கையின் தூதுக் குழுவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிச் சென்று திரும்பியுள்ளார். அங்கு அவர் உரையாற்றும் போது, உணவு நெருக்கடியின் தன்மைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான காரணங்கள் போன்றன பற்றி பயன் உள்ள கருத்துகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

1977 ஆம் ஆண்டுக்குப் பின்பான காலப்பகுதியில் தரமான பொருளாதாரக் கொள்கை காரணமாக நமது நாடு உலகமயமாதலுக்குத் திறந்து விடப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கிராமங்களை மையமாகக் கொண்ட விவசாயம் அழிவடைந்து வந்துள்ளமையையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் எரிபொருள் விலை அதிகரிப்புகளும் காலநிலை மாற்றங்களும் விவசாய இடுபொருட்களின் விலை உயர்வுகளும் உணவு விவசாய உற்பத்தியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் எடுத்துக் கூறியுள்ளார். எல்லா சர்வதேச மாநாடுகளிலும் வழமையாகப் பாடிவரும் பல்லவியான பயங்கரவாதத்தினாலும் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிற என்பதையும் பாட மறந்து விடவில்லை.

இத்தகைய உணவு விவசாய நெருக்கடிக்கும் வளர்ந்து வரும் வறுமை பட்டினித் தவிர்ப்பிற்கும் ஜனாதிபதி ஒரு ஆலோசனையையும் முன்மொழிந்து கொண்டார். உணவு விவசாய நெருக்கடிக்கு உள்ளான நாடுகளுக்கு உதவுவதற்கான ஒரு பொது நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நிதியத்திற்கு பாரிய பல்தேசியக் கம்பனிகள் ஆயுத வியாபாரிகள் நிதி வழங்கும் முகவர்நிறுவனங்கள் தனிப்பட்ட கொடையாளிகள் பெருந்தொகைப் பங்களிப்பை வழங்குவதன் மூலம் இவ் உலக உணவு நெருக்கடி நிதியத்தை உருவாக்கி பயன்பெற முடியும் எனத் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

ஜனாதிபதியின் மேற்படி உச்சிமாநாட்டு உரையை வாசித்து முடித்த போது "பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை' என்ற முதுமொழி தான் நினைவில் தட்டியது.

இன்றைய உணவு விவசாய நெருக்கடியானது கடந்த மூன்று தசாப்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளாகும். இது நமது நாட்டில் மட்டுமன்றி, மூன்றாம் உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசியல் தீர்மானங்களின் ஊடாக வளர்ச்சி பெற்றவைகளாகும். ஒரு புறம் உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலைத் திணித்த ஏகாதிபத்திய சக்திகளின் ஊடுருவல்களாகும். பொருளாதாரத் தளத்தில் திறந்த பொருளாதாரத்தையும் தனியார் மயத்தையும் விரைந்து நமது மக்களின் தோள்களிலும் தலைகளிலும் சுமைகளை ஏற்றிக் கொண்டதாகும்.

மறுபுறம் நம்நாட்டு ஆளும் தரப்பாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மேற்படி உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலை செங்கம்பளம் விரித்து வரவேற்று நடைமுறைப்படுத்தினர். இத்தகைய நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றுக்கு மற்றையது சளைத்தவையல்ல என்ற விதமாகவே நடந்து வந்துள்ளன.

ஜனாதிபதி இலங்கையின் 77 வீதமான பிரதேசங்கள் விவசாயக் கிராமப்புறங்களாக இருந்து வருவதைச் சுட்டிக் காட்டி, நாடு பழைய நிலைக்குச் சென்று கிராமிய விவசாயத்திற்கும் கிராமியக் கைத்தொழில்களுக்கும் மீளச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார். எவ்வாறு செல்வது என்பதற்கு தனது அரசாங்கமும் தானும் தற்போது ""வளமான வாழ்வுக்காக அதிக உணவை வளர்ப்போம்' என்ற விவசாய விஸ்தரிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், எவ்வாறுதான் ஜனாதிபதி கூறினாலும் அவரது உரையில் இரட்டைத்தன அணுகுமுறை உறைந்திருந்தமையைக் காணமுடிந்தது. விரைவு நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள், பாரிய துறைமுகங்கள், அகல நெடுஞ்சாலைகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், நீர் அனல் மின் நிலையங்கள் போன்றன கட்டுவது ஜனாதிபதி கூறிய கிராமிய விவசாயத்தைப் பெருக்குவதற்கு அல்ல. அவை உலகமயமாதலின் திறந்த பொருளாதாரத்தின் தனியார் மயத்தின் பல்தேசியக் கம்பனிகளின் தேவைகளுக்கானவைகளாகும் என்பதை மறந்துவிட முடியாது. பல்லாயிரக்கணக்கான வளமுள்ள விவசாய நிலங்களை பல்தேசியக் கம்பனிகளுக்கு தாரைவார்த்து விட்டு விவசாயத்தை எவ்வாறு வளம்படுத்த இயலும். வடக்கு, கிழக்கின் நெற் செய்கைக்கான நிலங்களையும் ஏனைய உற்பத்தி திறன்மிக்க காணிகளையும் பறித்தெடுத்து இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக்கி வைத்துக் கொண்டு எவ்வாறு நெல் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். அந்த நிலங்களில் பயங்கரவாதிகள் என்போர் மட்டும்தான் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறார்களா? இராணுவ முகாம்களைச் சுற்றியும் முன்னரங்க காவல் அரண்களுக்கு முன்பாகவும் விதைத்துள்ள கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பது அரசாங்கப் படைகள் அல்லவா? நாட்டின் நெற் களஞ்சியம் எனப்படும் கிழக்கு மாகாணத்தைத் தொடர்ந்தும் பாவப்பட்ட பிரதேசமாக வைத்து பேரினவாத உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வரும் அரசாங்கத்தினால் இயல்பு வாழ்வும் சமாதானமும் பாழடிக்கப்பட்டே வருகிறது. இந்த லட்சணத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட நெல் உற்பத்தியை அங்கு மேற்கொள்ள முடியவில்லை.

வடக்கில் முடுக்கி விடப்பட்ட யுத்தம் நெல்லையும் உப உணவு உற்பத்திகளையும் தந்து கொண்டிருந்த சூழலை முற்றிலும் மூழ்கடித்துவிட்டது. அங்கு வளமுள்ள விவசாய நிலங்களில் பெரும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டு கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ள நிலங்களாகக் காட்சி தருகின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கில் நெல் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம், பயங்கரவாதம் எனப் பெயர் மாற்றி அழைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினையேயாகும். அதற்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதற்குப் பதிலாக யுத்தம் வடக்கு, கிழக்கு மீது திணிக்கப்பட்டதன் விளைவுகளும் இன்றைய இலங்கையின் உணவு நெருக்கடி விலை உயர்வுகளுக்குள் உள்ளடங்கி நிற்கின்றது.

ஆதலால் உலகில் நடைபெறும் எந்தவொரு மாநாடுகளையும் தவறவிடாது கலந்துகொள்ளும் ஜனாதிபதி, ரோம் மாநாட்டிலும் கலந்துகொண்டு உணவு நெருக்கடிக்கான காரணங்களை பட்டியலிட்டுக் கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியுள்ள காரணங்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை அவரும் அவரது தலைமையிலான அரசாங்கமும் எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. விவசாயிகளுக்கு உரமானியமும் உபகரணங்களும் நியாயமான வழிகளில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் விவசாயிகளிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றது. இத்தனை நெருக்கடிகளின் மத்தியிலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலைக்கு விற்க முடியாதளவிற்கு விவசாயிகள் பெரும்நெல் குத்தும் ஆலைச் சொந்தக்காரர்களால் சுரண்டப்படுகிறார்கள். அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்களின் உறவினர்களே விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல் கொள்வனவில் ஈடுபட்டு கொள்ளை இலாபம் பெறுகிறார்கள் எனப் பாராளுமன்றம் வரை குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், விவசாயிகள் எரிபொருட்களை அரசாங்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கூடிய விலைகளில் பெற்றே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு என்ற பெயரில் எரிபொருட்களின் மூலம் அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது.

அதேவேளை, எரிபொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தி சிக்கனப்படுத்திக்கொள்ளவோ அரசாங்கத்திடம் திட்டம் எதுவுமில்லை. நூற்றி எட்டு அமைச்சர்களும் அவர்களது அமைச்சுகளும் பயன்படுத்தும் வாகனங்களும் அவர்களுக்கான சலுகை விலை எரிபொருள் விநியோகங்களும் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்க திணைக்களங்களும் பாதுகாப்புத் தரப்புகளும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மில்லியன் ரூபாய்களிலேயே இருந்து வருகின்றன. இவற்றினால் ஏற்படும் நட்டம் முழுவதும் பொதுமக்களின் தலைகளிலேயே சுமத்தப்படுகின்றன. மற்றொரு புறத்திலே வாகனங்கள் கட்டுப்பாடற்ற இறக்குமதி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலான யப்பானிய வாகனங்கள் மறுசீரமைக்கப்பட்டவையாகும். அங்கு பாவிக்கக்கூடாது எனக் கழிக்கப்பட்டவைகளை திருத்தம் செய்து மறுசீரமைக்கப்பட்டவை என்ற பெயரில் இங்கு கொண்டு வந்து கொட்டிக் குவிக்கப்படுகிறது. அவற்றை வாங்குவதன் மூலம் நமது நாட்டுப் பணம் தங்கு தடையின்றி வெளியேறும் அதேவேளை, குறிப்பிட்ட வருடங்களின் பின் சூழல் மாசடையும் வகையிலான வாகனங்களாக மாறிவிடுகின்றன. அவை எரிபொருட்களை அதிகம் எரிக்கும் வாகனங்களாகி புகை கக்கி சூழலை மாசடையவும் வைக்கின்றன. இந்த வகையான வாகன இறக்குமதியும் பாவனையும் எவ்வளவிற்கு மக்களின் ஆரோக்கியத்திற்கும் நாட்டிற்கும் அபாயம் என்பது அரசாங்கத் தலைவர்களுக்கோ அல்லது அதியுயர் ஜனாதிபதிக்கோ தெரிவதில்லை.

சகல நிலைகளிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் அபாயங்களைக் கொண்டுவரும் காரணிகளே மறைமுகமாகவும் நேரடியாகவும் வளர்ந்து செல்கின்றன. இவை மனிதர்களால் மனிதர்களிடமிருந்து சுரண்டப்படுவதற்காக "அபகரிப்புகளுக்காக' கொள்ளையிடப்படுவதற்காக நடாத்தப் படும் காரியங்களாகவே காணப்படுகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்தி மக்களுக்கு உரிய வழிகாட்டும் திறன் ஆளும் வர்க்க ஆட்சித் தலைமைகளிடம் இல்லை. இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சியிடமும் இல்லை என்பது தெளிவாகிறது.

இன்று சகலவற்றையும் பயங்கரவாதம் என்ற திரைச்சீலையால் மறைத்துக் கொண்டு ஆட்சி இருப்பிற்கும் அடுத்த பதவிக் காலத்தின் தொடர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலும் யுத்தமும் எவ்வித மறுபரிசீலனையும் இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களிலான இந்த இரட்டை அணுகுமுறைகளின் பாரிய எதிர்விளைவே இன்றைய உணவு விவசாய நெருக்கடியும் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வுகளாகும். உலகமயமாதலின் கீழான தாராள பொருளாதாரக் கொள்கையிலும் தனியார்மயத்தையும் தடுத்துநிறுத்தும் துணிவும் ஆற்றலும் மகிந்த சிந்தனைக்கு உள்ளதா? பயங்கரவாதம் எனப் பெயர் மாற்றி அழைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் கண்டு யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தைக் கொண்டுவரும் ஆற்றலை மகிந்த சிந்தனை அரசாங்கம் கொண்டிருக்கிறதா? இவை இரண்டிற்கும் உரிய பதில் இல்லையெனில் ரோம் உச்சி மாநாடு போன்று ஆயிரம் மாநாடுகளில் பங்குகொண்டு ஜனாதிபதி அழகான வார்த்தை யால உரை நிகழ்த்தினாலும் அவையாவும் வெற்றுத் தகர ஒலி எழுப்பல்கள் மட்டுமேயாகும்.

Email this page Your Opinion Print this page
யாவுமே வெற்றுத்தகர ஒலி எழுப்பல்கள் மட்டுமே
தமிழ் வழியில் உயர் கல்வி
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com