வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ள செனட்டர் பராக் ஒபாமா சக போட்டியாளரான செனட்டர் ஹிலாரி கிளின்டனுடன் திடீர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்திப்பு ஜனநாயகக்கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு தேவையான பேராளர்களின் ஆதரவை ஒபாமா பெற்ற இரு தினங்களின் பின்னர் நடைபெற்றுள்ளது.
கட்சியை ஒன்றிணைத்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளல் போன்றவை தொடர்பில் ஆராய்வதற்காகவே இச் சந்திப்பு இடம்பெற்றதாக ஒபாமாவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி தெரிவு செய்யப்படுவார் என பரவலாக ஊகங்கள் நிலவிவரும் நிலையில் இது தொடர்பில் ஹிலாரி உறுதியான கருத்து எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லையென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டனிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ள போதும் இது ஹிலாரியின் வீட்டில் இடம்பெற்றதா அல்லது வேறெங்காவது பொது இடத்தில் இடம்பெற்றதா என்பது தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிப்பதற்கு ஒபாமாவின் பேச்சாளர் மறுத்துள்ளார்.
இதேவேளை, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்னை இலக்கு வைத்து ஒபாமா பிரசார நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒபாமாவின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ஆதரவாளர்களுக்கு ஹிலாரி மின்னஞ்சல் மூலம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
எனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், ஒபாமாவுக்கு என் ஆதரவை தெரிவிக்கவும், கட்சி ஒற்றுமையை வலியுறுத்தியும் நான் இன்று (சனிக்கிழமை) வாஷிங்டனில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் நான் வெளிப்படையாக ஒபாமாவுக்கான ஆதரவை தெரிவிப்பேன். ஜனநாயகக்கட்சி வேட்பாளர் நியமனத்தை ஒபாமா பெற்றால் நான் மனப்பூர்வமான ஆதரவை அவருக்கு அளிப்பேன் என்ற உறுதிமொழியை என் பிரசாரம் முழுவதும் நான் கூறிவந்திருக்கிறேன். அந்த உறுதி மொழியை செயற்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
எனக்கும், ஒபாமாவுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிறியது தான். மக்கெய்னுடன் எனக்கு உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டால் இந்த வேறுபாடு சாதாரணமானது தான்.
கட்சியை எப்படி ஒபாமா பின்னால் ஒருங்கிணைப்பது என்பது பற்றி இன்று நடக்கும் நிகழ்ச்சியில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அவரது ஆதரவாளர்கள் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்வதற்காக 3 பேர் கொண்ட ஒரு குழுவை ஒபாமா அமைத்து இருக்கிறார். இதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடியின் மகன் கரோலின் இடம்பெற்று இருக்கிறார். ஒபாமாவின் பல ஆலோசகர்களும், முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரியை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.