ரோம்: 2030 ஆம் ஆண்டுக்குள் உலக உணவு உற்பத்தியை இருமடங்காக அதிகரிப்பது, ஏழை நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு பலத்த ஆதரவை வழங்குவது என்ற உறுதிமொழிகளுடன் உலக உணவு நெருக்கடி மாநாடு நிறைவடைந்துள்ளது.
இத்தாலியின் தலைநகர் ரோமில் உணவு நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக 3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் முடிவில் இதில் கலந்து கொண்ட 181 நாடுகளின் தலைவர்களும் இவ் உறுதிமொழிகளுக்கு இணங்கியுள்ளனர்.
இதேவேளை, இந்நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வருடத்திற்கு 20 பில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகை தேவைப்படுமென ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கிமூன் எச்சரித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதென்ற அடிப்படையில் விவசாயத்துறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இம்மாநாட்டின் தீர்மானத்தை அரசாங்க பிரதிநிதிகளும் உதவி அமைப்புகளும் வரவேற்றுள்ளனர்.
நீண்டகாலத்தின் பின்னர் முதற்தடவையாக உலக அரங்கில் விவசாயத்துறை முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கலந்துகொண்ட நாடுகள் அனைத்தும் இப்பிரகடனத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளமை சர்வதேச சமூகம் ஒருமித்த குரலில் பேச ஆரம்பித்துள்ளமைக்கான அறிகுறியென ஐ.நா.வின் உணவு உரிமை தொடர்பான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இக்கலந்துரையாடலிலிருந்து அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளை விலக்கி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதேவேளை, உயிரியல் எரிபொருள் உற்பத்தி தொடர்பிலும் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத் துறையின் துரித வளர்ச்சியே உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பில் 30 வீதத்திற்கு தாக்கம் செலுத்தியிருப்பதாக ஐ.நா.அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்த போதும் உயிரியல் எரிபொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எதுவும் இங்கு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.